ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர் லால். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் பிங்கி சைனி வேறு சமூகத்தைச் சேர்ந்த ரோஷன் மஹாவர் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த சங்கர் லால் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தந்தை எதிர்ப்பையும் மீறி பிங்கி சைனி அந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
இதனால், சங்கர் லால் மகளைக் கட்டாயப்படுத்தி கடந்த 16ம் தேதி வேறொருவருடன் திருமணம் செய்துவைத்துள்ளார். இந்த திருமணம் பிடிக்காத பிங்கி மூன்றே நாளில் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார். பின்னர் ரோஷன் மஹாவருடன் சேர்ந்து வீட்டில் இந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனிடையே ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தங்களின் பெற்றோர் எங்களை ஏதாவது செய்துவிடுவார்கள் என பிங்கி சைனி முறையிட்டிருந்தார். பிறகு நீதிமன்றம், அவரின் பெற்றோரை அழைத்து, எந்தவிதமான விபரீத நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியது.
இந்நிலையில், பிங்கி இருந்த இடத்தை கண்டறிந்த சங்கர் லால், தனது உறவினர்களுடன் அங்கு சென்று வலுக்கட்டாயமாகப் பிங்கியை வீட்டிற்கு அழைத்து வந்து, கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். மேலும் அவராகவே காவல் நிலையத்திற்குச் சென்று, காதலித்ததால் மகளைக் கொலை செய்ததாகக் கூறி சரணடைந்துள்ளார்.
இதையடுத்து, போலிஸார் சங்கர் லால் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே தந்தையே மகளை ஆணவக்கொலை செய்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதுடன், சில சமூக நல அமைப்புகள் இச்சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ளன.
சமீபத்தில், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், காதல் திருமணங்களே சாதியை ஒழிக்கும் எனக் கூறியிருந்த நிலையில், இந்தியாவில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.