பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிமுறைக்குள் கொண்டு வந்தால், பெட்ரோல் லிட்டர் ரூ.75 ஆகவும், டீசல் ரூ.68 ஆகவும் குறையும் என எஸ்.பி.ஐ பொருளாதார வல்லுநர்கள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், எரிபொருட்களுக்கு மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள அதிக வரியால் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது.
தற்போது ஒவ்வொரு மாநிலமும், பெட்ரோல், டீசலுக்கு ஒவ்வொரு விதமான வரியை விதிக்கின்றன. மத்திய அரசு தனியாக உற்பத்தி வரி, செஸ் வரியை விதிக்கிறது. இதனால் ஒருசில மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்துவிட்டது.
சென்னையில் இன்றைய தேதியில் பெட்ரோல் லிட்டர் 93.11 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஏழை நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிமுறைக்குள் கொண்டுவந்தால், விலை குறையும் என எதிர்க்கட்சியினரும், பொருளியல் நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்.பி.ஐ வங்கியின் பொருளாதார வல்லுநர்கள் குழு நடத்திய ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், பெட்ரோல், டீசல் எரிபொருளை ஜி.எஸ்.டி வரி முறைக்குள் கொண்டுவர வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி வரிக்குள் பெட்ரோலை கொண்டு வந்தால் பெட்ரோல் லிட்டர் ரூ.75 ஆகவும், டீசல் ரூ.68ஆகவும் குறையக்கூடும்.
ஆனால், ஜி.எஸ்.டி வரிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவந்தால், மத்திய - மாநில அரசுகளுக்கு வரி வருவாய் கடுமையாகப் பாதிக்கும். குறிப்பாக, வரி வருவாயில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இதன் காரணமாகவே பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டுக்கின்றனர்.
ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வரப்பட்டால் போக்குவரத்து கட்டணம் டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.25 ஆகவும், பெட்ரோலுக்கு ரூ.3.82 ஆகவும், டீசல் கமிஷன் டீசலுக்கு லிட்டர் ரூ.2.53, பெட்ரோலுக்கு ரூ.3.67 ஆகவும் இருக்கிறது.
இதுதவிர பெட்ரோலுக்கு ரூ.30, டீசலுக்கு ரூ.20 என விதிக்கப்படும் செஸ் வரியை மத்திய மாநில அரசுகள் சமபங்காக பிரித்துக்கொள்ளும். ஜி.எஸ்.டி வரி 28 சதவீதம் விதிக்கப்படக்கூடும். இதன் மூலம் பெட்ரோல் லிட்டர் ரூ.75 ஆகவும், டீசல் லிட்டர் ரூ.68 ஆகவும் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது குறித்து அறிந்துள்ள பா.ஜ.க அரசும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், பொதுமக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.