மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததில் இருந்தே இந்தியா கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. மேலும் கொரோனா தாக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த துயரத்தில் இருந்தே மக்கள் மீண்டுவராத நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பெட்ரோல் விலை 100 கடந்துவிட்டது. இன்னும் சில மாநிலங்களில் 100ஐ நெருங்கிவிட்டது.
இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், சாமானிய மக்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படாமல், விலை உயர்வுக்கு நாங்கள் காரணம் இல்லை என்ற வகையில் பொய் பேசி வருகிறது மோடி அரசு.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், "மத்திய - மாநில அரசுகள், பெட்ரோல் - டீசல் மீதான மறைமுக வரியை குறைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற, நாணயக் கொள்கை குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசுகையில், " பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, உற்பத்தி செலவிலும், போக்குவரத்து செலவிலும் மற்ற துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே, பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்க மத்திய, மாநில அரசுள் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொரோனா அழுத்தத்தில் இருந்து நாட்டையும், மக்களையும் மீட்க வேண்டும் என்பதை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.