இந்திரா காந்தி அவசரநிலையை அறிவித்தது தவறு என்றும், இதற்கு மன்னிப்பு கோருவதாகவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார். அதுபோல, குஜராத் கலவரத்திற்கு பா.ஜ.க மன்னிப்பு கோர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலை தவறான முடிவு என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பொருளாதார நிபுணர் கவுசிக் பாசுவுடனான உரையாடலின்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நவாப் மாலிக்,"காங்கிரஸ் அறிவித்த அவசரநிலை பிரகடனத்தைத் தவறு என்று ராகுல்காந்தி ஏற்றுக்கொண்டார். அதேபோல் 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரங்களுக்காகவும் காங்கிரஸ் மன்னிப்பு கோரியது. இதுபோல் குஜராத் கலவரம் தவறு என்று பா.ஜ.க-வும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேல், "நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் எந்த தவறுமில்லை. இது ஒரு மகத்தான நகர்வு. குஜராத் கலவரம் என்பது மனிதநேயத்தின் மீது படிந்த களங்கம். இந்த களங்கத்திற்கு பா.ஜ.க-வும் மோடியும் மன்னிப்பு கேட்பார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.