மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், பா.ஜ.க ஆட்சியில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ரூபாய் 14,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த இழப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய மோடி அரசு, அதற்கு மாறாக தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக செயல்படுகிறது. குறிப்பாக மோடியின் தயவால் சந்தைக்கு புதிதாக வந்த ஜியோ நிறுவனத்தால் ஏர்டெல், வோடஃபோன்- ஐடியா, பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள், கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
ஆரம்பத்தில் மலிவான விலையில் தனது சேவையை வழங்கி வந்த ஜியோ தற்போது அதன் சேவைக் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தி வருகிறது. ஜியோ சேவையுடன் போட்டி போடுவதற்காக தங்கள் சேவையை குறைத்த மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களால் இன்னும் மீள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லுக்கு 4ஜி அலைக்கற்றை மற்றும் உபகரணங்களை வாங்கித்தராமல் மத்திய பா.ஜ.க அரசு கார்ப்பரேட் கம்பெனிகள் லாபம் குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.57,122 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கி ஏலத்தில் முன்னிலை நிறுவனமாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு தொலைத் தொடர்பு சேவைக்கான அலைக்கற்றை ஏலத்தில் தொலை தொடர்பு நிறுவனங்கள் ரூ.77,814 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன. இதில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 கோடிக்கு அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஜியோவுக்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.18,699 கோடிக்கும், வோடஃபோன் 1,993.40 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன. மேலும் இந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைகள் ஏலத்தில் இடம்பெறும் என எதிர்பார்த்த நிலையில், 4ஜி அலைக் கற்றைகள் மட்டுமே இடம்பெற்றன. குறிப்பாக 700, 800, 900, 1800, 2100, 2300 மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் ஏலத்தில் விற்கப்பட்டன.
இதில் 700 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இவை இரண்டு தவிர்த்து பிற மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் 60 சதவீதம் ஏலத்தில் எடுக்கப்பட்டன. மொத்தமாக ஏலத்துக்காக ஒதுக்கப்பட்ட 2308.80 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் ஏலத்தில் எடுக்கப்பட்ட அலைக்கற்றைகளின் அளவு 855.60 மெகா ஹெர்ட்ஸ் ஆகும்.
ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான அலைக்கற்றைகள் விற்கப்படும் என அரசு எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்ப்பைவிட அதிகமாகவே ஏலத்தில் விற்கப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏலத்தில் ஒதுக்கப்படும் அலைக்கற்றை மீது நிறுவனங்களுக்கு 20 ஆண்டு உரிமை அளிக்கப்படுவதாகவும் இந்த அலைக்கற்றைகள் மீது 3 சதவீதம் பயன்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு எதிர்பார்த்த தொகையை விட கூடுதலாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது அரசுக்கு வேண்டுமானால் லாபத்தை தரலாமே தவிர, தொலைத்தொடர்பு சேவையை தொடரும் சாமானியர்களுக்கு ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. செல்போன் தொலைத் தொடர்பு கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.