இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலைக்காரணம் இந்தியா வளர்ச்சிப்பாதையில் இருந்து பின்னோக்கிச் செல்கிறது. இந்நிலையில், 2020-21 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல்காலாண்டில் மைனஸ் 24.4 சதவிகிதம், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் மைனஸ் 7.3 சதவிகிதம் என தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் வீழ்ச்சியைச் சந்தித்தது.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக முதன்முறையாக, பொருளாதார மந்த நிலைக்குள்ளும் இந்தியா நுழைந்தது. ஆனால், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், ஜி.டி.பி சற்று வளர்ச்சிப் பாதையை நோக்கி திரும்பியிருப்பதாகவும், 0.4 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாகவும் மோடி அரசு அண்மையில் புள்ளி விவரங்களை வெளியிட்டது.
மோடி அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களை பொய் என்றும் தவறான கணக்கீட்டின் அடிப்படையில் இந்த ஜி.டி.பி புள்ளிவிவரம் இருப்பதாகவும், 0.4 சதவிகித ஜி.டி.பி வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை என்றும் பா.ஜ.கவின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுப்பிரமணியசாமி கூறுகையில், “குறிப்பாக, லாஸ்பேயர்ஸ் விலைக் குறியீட்டைப் பயன்படுத்தி (Laspeyres Price Index Number) ஜி.டி.பி விகிதத்தை கணக்கிட்டால் அது மைனஸ் 10 சதவிகிதமாக இருந்திருக்கும். இதுவே பாஷே குறியீடு (PaascheIndex) அடிப்படையில் கணக்கிட்டால் அது மைனஸ் 15 சதவிகிதமாக இருந்திருக்கும். ஆனால் ஒருபோதும் 0.4 சதவிகித வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை.
அதேப்போல், எம்.எஸ்.எம்.இ-க்கள் மற்றும் முறைசாரா துறைகளில் எதிர்மறையான வளர்ச்சியினை யூகித்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்த்தால், அது லாஸ்பேயர்ஸ் விலைக் குறியீட்டின் படி (Laspeyres Price Index) இந்தியாவின் ஜி.டி.பி விகிதம் மைனஸ் 10 சதவிகிதமாக இருக்கும். இதையே, பாஷே குறியீட்டைப் (Paasche Index) பயன்படுத்தினால் மைனஸ் 15 சதவிகிதமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
லாஸ்பேயர்ஸ் விலைக் குறியீடு என்பது பொருளாதாரத்தின் பொதுவான விலை நிலை மற்றும் வாழ்க்கைச் செலவை அளவிடுவதற்கும், பணவீக்கத்தினை கணக்கிடுவதற்கு பயன்படுத்தும் ஒரு குறியீடாகும். பாஷே குறியீடு என்பது ஒரு நுகர்வோர் விலைக் குறியீடாகும்.