ஆந்திராவில் உள்ள ஆந்திர ஜோதி தொலைக்காட்சியில், அமராவதி திட்டத்திற்காக வங்கியிடம் இருந்து ரூபாய் 3 ஆயிரம் கோடி மாநில அரசு வாங்குவது தொடர்பான விவாதம் செவ்வாயன்று நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இதில் அமராவதி பரிராக்ஷன சமிதி கூட்டு நடவடிக்கைக்குழு உறுப்பினர் கோலிகாபுடி சீனிவாச ராவ், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் எஸ்.விஷ்ணுவர்தன் ரெட்டி மற்றும் சிலர் கலந்துகொண்டனர்.
இந்த விவாதத்தில் பேசிய விஷ்ணுவரதன் ரெட்டி, "எவருமே கடனை ரகசியமாகவே நாடுவார்கள். ஆனால், ஆந்திராவில் மட்டும்தான் சிறந்த முதலமைச்சர்களும், திட்ட ஆணைய தலைவரும் விமானத்தில் மும்பை சென்று கடனை நாடியிருக்கிறார்கள்" என பேசினார். அப்போது விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் என தொகுப்பாளரிடம் சீனிவாச ராவ் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, சீனிவாச ராவ், 'விஷ்ணுவர்தனின் கருத்து எப்போதுமே முட்டாள்தனமாகவே இருக்கும்' என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய விஷ்ணு வர்தன், 'இப்படி சொல்வதை சீனிவாச ராவ் நிறுத்தவேண்டும்’ என கூறினார். அதற்கு சீனிவாச ராவ், தேவைப்பட்டால் 'முட்டாள்' என்ற வார்த்தையை நூறு முறை கூறுவேன் எனத் தெரிவித்தார்.
அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் குறுக்கிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் சமாதானமடையாத விஷ்ணுவர்தன், 'தெலுங்கு தேச கட்சியின் முகவர்தான் சீனிவாச ராவ்' என குற்றம்சாட்டினார். இதனால் ஆவேசமடைந்த சீனிவாச ராவ், திடீரென காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி, பா.ஜ.க பொதுச் செயலாளர் விஷ்ணுவர்தன் மீது வீசினார். யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இது குறித்து ஆந்திர ஜோதி நிர்வாகம் கூறுகையில், இந்த சம்பவம் நடந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், இனி ஸ்ரீனிவாச ராவை விவாதங்களுக்கு அழைக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது.