பா.ஜ.க அரசின் மக்கள் விரோத சட்டங்களால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தற்போது தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருவது சாமானிய மக்களை அவதிக்குள்ளாகியுள்ளது. மேலும், மத்திய பிரதேசம், ராஜஸ்டான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் 100ஐ கடந்து பெட்ரோல் விலை விற்பனையாகிறது. மேலும் டீசல் விலையும் கிட்டத்தட்ட 100ஐ நெருங்கிவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு உடடினயாக பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், ராமர் கோவில் கட்ட பணம் வசூலிப்பதற்கு பதிலாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் இதனால் ராம பக்தர்களுக்கு உணவு கிடைக்கும். ராமரும் சந்தோஷப்படுவார் என்று சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகை மோடி தலைமையிலான பா.ஜ.க அரச விமர்சித்துக் கட்டுரை தீட்டியுள்ளது.
மேலும், கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நடிகர்கள் அக்ஷய்குமார், அமிதாப் பச்சன் போன்றவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தனர். ஆனால், தற்போது பெட்ரோல் - டீசல் விலை 100ஐ கடந்தும் ஏன் மவுனமாக இருக்கிறார்கள் என்றும் அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜாரத் முதல்வராக இருந்தபோது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் குறைக்க முடியவில்லை என்றால் காங்கிரஸ் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என கூறினார். ஆனால் மோடி அரசாங்கத்தின் மீது யாராவது குறை சொன்னால், அவர்கள் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். இதனால் யாரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கருத்து கூற முடியாமல் பேச்சுரிமையை இழந்துள்ளோம் என மோடி அரசை கடுமையாக சாடி கட்டுரை எழுதப்பட்டுள்ளது.