பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில் “பழைய காலம் திரும்புது தலைப்பில் தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:-
“கடந்த சில நாட்களாக மக்களை தெளிய விட்டு, தெளிய விட்டு அடிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். பெட்ரோல், டீசல், கேஸ் போன்றவைகளின் விலையோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் பரிதவித்து நிற்கின்றனர்.
‘சர்வதேச சந்தையில் உள்ள விலை நிலவரங்களின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்துக் கொள்கின்றன. இதில் எங்களை எப்படி குறை சொல்லலாம்’ என்கிறது மத்திய அரசு. ஒரு சின்ன புள்ளிவிவரத்தை பார்க்கலாம்.
பெட்ரோலின் அடிப்படை விலை லிட்டருக்கு சுமார் ரூ.32. டீசலின் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ.34. ஆனால் அரசின் வரி விதிப்பால் ஒரு லிட்டர் பெட்ரோலை சுமார் ரூ.92 மற்றும் ஒரு லிட்டர் டீசலை சுமார் ரூ.80க்கும் வாங்கி வருகிறோம்.
அதாவது, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு சுமார் ரூ.58. டீசல் மீதான வரி லிட்டருக்கு சுமார் ரூ.47 என உள்ளது. அதாவது, மத்திய கலால் வரி, டீலர் கமிஷன், மாநில அரசால் விதிக்கப்படும் வாட் வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி, செஸ் வரி ஆகியவைகள் சேர்த்து நம்மிடம் பெட்ரோல், டீசல் சேரும் போது, அடிப்படை விலையை விட கிட்டத்தட்ட 2 மடங்கு வரியை கூடுதலாக செலுத்த வேண்டி உள்ளது.
நம்மை விட பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளில் கூட பெட்ரோல் விலை குறைவாகவே உள்ள நிலையில், ஏன் மத்திய, மாநில அரசுகள் இதன் மீதான வரி விதிப்பை குறைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
ஒரு அரசை நடத்திச்செல்ல வரி கட்டாயம் தான். மன்னர் காலத்தில் இருந்தே இந்த முறை நடைமுறையில் உள்ளது. மறுப்பதற்கில்லை. அதே நேரம் நாட்டு மக்களின் பொருளாதார நிலையையும் கருத்தில் கொண்டே வரி விதிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை, நமது வாகனத்திற்கான பிரச்சினையாக மட்டுமே கருதிவிட முடியாது.
இதனால் சரக்கு லாரி வாடகை உயரும். அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும். கடந்த சில நாட்களுக்கு முன் குறைந்திருந்த வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போது சில்லரை விலையில் சின்ன வெங்காயம் ரூ.120 - 130, பெரிய வெங்காயம் ரூ.60 - 70 வரை தரத்திற்கேற்ற வகையில் உயர்ந்துள்ளது.
அது மட்டுமல்ல ரூ.15க்கு விற்ற தக்காளி ரூ.40, ரூ.20க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.45 என விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 11 நாட்களில் வீடு மற்றும் வர்த்தக உபயோகத்துக்கான கேஸ்சிலிண்டர் விலை ரூ.75 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தற்போது கேஸ் சிலிண்டர் விலை ரூ.800-ஐ தாண்டிஉள்ளது.
இப்படி தொடர் விலையேற்றத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் 22ஆம் தேதி தி.மு.க.சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடக்க உள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இந்தியாவின்பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை குறைத்து, மக்களின் பொருளாதார சுமையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் பழங்காலம் போல், மாட்டு வண்டி, குதிரைவண்டி, சைக்கிள், சுள்ளி பொறுக்கி சமைப்பது என வாழ வேண்டிய நிலையே ஏற்படும். வேறு வழியே இல்லை.”
இவ்வாறு தலையங்கம் தீட்டியுள்ளது தினகரன் நாளேடு.