மு.க.ஸ்டாலின்

“பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து பிப்.,22ல் ஆர்ப்பாட்டம்” - தி.மு.க. தலைவர் அறிவிப்பு!

கடந்த ஆறு ஆண்டுகளில் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசச் சந்தையில் 50 சதவீதம் குறைந்த நிலையிலும் - அந்த விலைக் குறைப்பின் பயனில் ஒரு பைசாவைக் கூட மக்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளிக்கவில்லை

“பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து பிப்.,22ல் ஆர்ப்பாட்டம்” - தி.மு.க. தலைவர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

“வரலாறு காணாத பெட்ரோல் – டீசல் - கேஸ் சிலிண்டர் விலை உயர்வைச் செய்திருக்கும் பா.ஜ.க. – அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக விலை குறைப்பு செய்ய வலியுறுத்தியும், தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.787.50-க்கு கண்ணைக் கட்டும் அளவிற்கு உயர்த்தி – சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழக இல்லத்தரசிகளுக்கு ஒரு “அதிர்ச்சி”ப் பரிசை அளித்து விட்டுச் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டிசம்பர் மாதத்தில், தலா 50 ரூபாய் வீதம், இரு முறை 100 ரூபாய் அதிகரிப்பு - பிப்ரவரி மாதத்தில் இரு முறை 75 ரூபாய் அதிகரிப்பு எனத் தாய்மார்களைக் கண்ணீர் சிந்த வைத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, பெட்ரோல் டீசல் விலையையும் கண்மூடித்தனமாகச் செங்குத்தாக உயர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

2011-இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த போது, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 63.37 பைசாதான். டீசல் விலை 43.95 பைசா மட்டுமே! அந்த விலையை எதிர்த்தே போராட்டம் நடத்திய அ.தி.மு.கவின் ஆட்சியில் இன்றைக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 91.19 ரூபாய். டீசல் விலை 84.44 ரூபாய்.

“பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து பிப்.,22ல் ஆர்ப்பாட்டம்” - தி.மு.க. தலைவர் அறிவிப்பு!

முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு பெட்ரோல் - டீசல் மீது 20 லட்சம் கோடி ரூபாய்க்குக் கலால் வரி விதித்தது முதல் காரணம் என்றால் - அ.தி.மு.க. அரசு - அதுவும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, கொரோனா காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 3.25 ரூபாயும், டீசல் விலை 2.50 ரூபாயும் அதிகரிக்கும் வகையில் “வாட் வரி” விதித்தது இந்த விஷம் போன்ற விலை உயர்விற்கு மற்றொரு காரணம்!

மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத மனப்பான்மையால், இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் பட்ஜெட் துண்டு விழுந்து - இந்த அரசுகள் உருவாக்கிய துயரத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த விலை உயர்வுகளால், காய்கறி முதற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் மனம் போன போக்கில் ஏறுகின்றன. போக்குவரத்துக் கட்டணம் உயருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரும் ஆபத்தில் சிக்குகின்றன. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேசச் சந்தையில் 50 சதவீதம் குறைந்த நிலையிலும் - அந்த விலைக் குறைப்பின் பயனில் ஒரு பைசாவைக் கூட மக்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அளிக்கவில்லை, தனது கஜானாவிலேயே தக்க வைத்துக் கொண்டது. போதாக்குறைக்கு, கொரோனா காலத்தில் கூட வருவாயைப் பெருக்க – பெட்ரோல், டீசல் மீது கலால் வரி போட்டு, 39 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது, மத்திய பா.ஜ.க. அரசு.

இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கலால் வரி வசூல் எங்கு போனது என்பதும், இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது!

ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாய்க்குப் போடும் போது, அதில் 18 ரூபாய் செஸ் வரி சாலை மேம்பாட்டிற்குப் போகும்போது, எதற்குச் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது? இதில் 'ஃபாஸ்டேக்' இல்லை என்றால் மூன்று மடங்கு வசூல் செய்யப்படும் என்ற எச்சரிக்கை வேறு! மோடி அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு என்பது தெளிவாகத் தெரிகிறது.

மத்திய பா.ஜ.க. அரசு விதித்துள்ள கலால் வரியை மட்டும் குறைத்தாலே, பெட்ரோ டீசல் விலை பெருமளவிற்குக் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஏழை - எளிய, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.

தினமும் பெட்ரோல் - டீசல் விலை போட்டி போட்டுக் கொண்டு பந்தயக் குதிரை போல் எகிறுகின்ற இந்த நேரத்தில் - சமையல் எரிவாயு விலையோ தாவிக்குதித்துச் செல்கிறது.

மக்கள் அல்லல்படும் இதுபோன்ற சூழலில் கூட நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர், “பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி குறைப்பு, அரசின் பரிசீலனையில் இல்லை” என்று கைவிரித்திருப்பது, மக்களைப் பற்றிய கவலை மத்திய அமைச்சருக்கும் இல்லை! மத்தியில் பா.ஜ.க. அரசுக்குத் தலைமை வகிக்கும் பிரதமருக்கும் அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 414 ரூபாய் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, ரூபாய் 787.50 ஆக உயர்ந்ததுகூட தங்கள் கண்ணுக்குத் தெரியாதது போல் பா.ஜ.க.வினர் ஆட்சி செய்து - மக்களை வாட்டி வதைத்து வருவது கவலையளிக்கிறது.

எனவே, வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டும் காணாமலும் இருக்கும் அ.தி.மு.க. - பா.ஜ.க. அரசுகளைக் கண்டித்தும் - கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு மக்களின் இன்னல்களைப் போக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 22-ஆம் நாள் (திங்கள்கிழமை) அன்று காலை 9 மணி அளவில், கழக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெருமளவில் மகளிர், வணிகர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் உள்ளோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும் அனைவரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அழைக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories