“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் வேலைகளில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
முன்னதாக, திருவள்ளுவருக்கு சாதி, மத அடையாளங்களை பூசும் வகையில் தமிழக பா.ஜ.க-வின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்துத்வா கும்பல் திருவள்ளுவர் சிலைக்கு காமவி அடையாளம் பூசி அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
அதுமட்டுமல்லாது அக்கட்சியில் அரசமைப்பின் உயர் பதவிகளில் உள்ள பலரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ள பா.ஜ.கவின் வெங்கையா நாயுடு, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் காவி உடையில் உள்ள திருவள்ளுவரின் புகைப்படத்தை பகிர்ந்து புதிய சர்ச்சையை கிளப்பினார்.
அதனைத் தொடர்ந்து தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க எம்.பி. செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்து, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை பயன்படுத்த வேண்டும். திருவள்ளுவருக்கு மதச்சாயமோ, சாதிச்சாயமோ பூசுவதை தவிர்க்க வேண்டும் என ட்விட்டரில் வலியுறுத்தினார்.
மேலும் பலரும் வெங்கையா நாயுடு செயலுக்கு கண்டனம் தெரிவித்த பின்னர் தனது பதிவை நீக்கினார். இந்நிலையில் இந்தி திணிப்பு, தமிழ்மொழி புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் சி.பி.எஸ்.இ நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள புத்தகத்தில் வள்ளுவரின் மனைவி வாசுகி குறித்த பாடத்தில் வள்ளுவருக்கு சாதி-மத சாயம் பூசி படம் ஒன்று வரைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சி.பி.எஸ்.இயின் இந்த பாடப் புத்தகத்தை Macmillan Publishers India Pvt. Ltd எனும் பதிப்பகம் அச்சிட்டுக் கொடுத்துள்ளது. வள்ளுவரின் சர்ச்சைப் படம் சி.பி.எஸ்.இயின் எட்டாம் வகுப்பு இந்தி புத்தகத்தில் உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக வெளியான புகைப்படத்தில், வள்ளுவரின் மனைவி வாசுகி குறித்த பகுதியில் உணவு பரிமாறுவது போன்று சித்தரிக்கப்பட்ட படத்தில் இருக்கும் வள்ளுவரின் உருவம் ஆரிய நபர் போன்று பட்டை- குடுமி - ருத்திராட்ச மாலை என காவி வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் வள்ளுவரின் இந்தப் படத்திற்கு தி.மு.க தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “சி.பி.எஸ்.இ 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்!
பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை!” எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் சி.பி.எஸ்.இ-க்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த புகைப்படத்தை மாற்றுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தகத்தை அச்சிட்ட பதிப்பகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக Macmillan Publishers நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சி.பி.எஸ்.இ பாடத்தில் சித்தரிக்கப்பட்ட படம் தற்போது கடும் எதிர்ப்பு மற்றும் சர்ச்சை தொடர்பான தகவல் எங்கள் கவணத்திற்கு வந்துள்ளது. இந்த பணிகளை மேற்கொள்வது தொடர்பான நடவடிக்கை எடுப்போம். உடனடியாக மாற்றுவது தொடர்பாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து காவி உடுத்தி, குடுமி வைத்த திருவள்ளுவர் படம் நீக்க நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.