கரூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் காந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த காந்தி சிலை பெயர்த்து எடுக்கப்பட்டு நகராட்சி வளாகத்தில் வைக்கப்பட்டது.
இது குறித்து அறிந்த காங்கிரசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நகராட்சி ஆணையரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டனர். அப்போது, அவர் ரவுண்டானா பகுதியை அகலத்தை குறைப்பதற்காக காந்தி சிலை அகற்றப்பட்டு புதிய காந்தி சிலை விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு ஜோதிமணி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், உடனடியாக அந்த இடத்தில் காந்தி சிலை வைக்க வேண்டும் எனவும் நேற்று இரவு பேட்டியளித்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலையில் காந்தி சிலை அகற்றப்பட்ட இடத்தில் புதிய காந்தி சிலையை வைக்கப்பட்டது. இது குறித்து அறிந்த ஜோதிமணி தலைமையில் 200 மேற்பட்ட காங்கிரசார் காந்தி சிலை அருகில் திரண்டனர்.
அப்போது காந்தி சிலை வைக்கப்பட்டுள்ள பீடமானது தரமற்ற வகையிலும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதை கண்டறிந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜோதிமணி தரமற்ற வகையில், கட்டப்படும் காந்தி சிலை பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை நாளை முதல்வர் திறந்து வைக்க உள்ளார். அப்போது நான் அவரிடம் நேரில் சந்தித்து தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ள காந்தி சிலையைத் திறப்பது ஏன் என்று கேள்வி எழுப்புவேன் என கூறினார். அதுமட்டுமில்லாமல், காந்தி சிலை அமைக்கும் பணிகளை தொடர கூடாது என ஜோதிமணி தலைமையில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த டி.எஸ்.பி முகேஷ் ஜெயக்குமார் தலைமையிலான போலிஸார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவும் காந்திசிலை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தக் கூடாது எனவும் உடனடியாக தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும் படியும் ஜோதிமணியை எச்சரித்தனர்.
அதற்கு ஜோதிமணி கட்டுமான பணிகளை தொடர கூடாது எனவும், தரமற்ற வகையில் டைபெறும் கட்டுமான பணி நடைபெறுவதை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் போலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஜோதிமணி மற்றும் காங்கிரஸாரை போலிஸார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்ட பின்னர் எம்.பி ஜோதிமணி கூறுகையில் “ஒரு எம்.பி மீது எடப்பாடி அரசு கை வைக்கவில்லை. தமிழகத்தின் பெண்கள் மீது இந்த எடப்பாடி அரசு வைத்துள்ளது. மோசமான ஊழல் எடப்பாடியின் ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன” என பேட்டி அளித்தார்.