கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல். கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவ்யா. இவர்கள் இருவரும் பெங்களூருவில் வேலை பார்க்கும்போது காதலித்துள்ளனர். இவர்கள் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரின் குடும்பத்தினரும் காதலை ஏற்க மறுத்துள்ளனர். இதனால், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் திவ்யா கர்ப்பிணி ஆனார். இவரின் பிரசவத்திற்காக மாலூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் ராகுல். அப்போது மருத்துவர்கள், திவ்யாவிற்கு சுக பிரசவத்திற்கான வாய்ப்பு இல்லை. அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே தாயையும், குழந்தையையும் காப்பாற்ற முடியும் என கூறியுள்ளனர்.
மருத்துவர்களின் அறிவுரைக்கு இணங்க ராகுல் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் திவ்யாவுக்கு மயக்கம் தெளியாமல் இருந்தது.
ஒருநாள், இருநாள் என்ற நிலை மாறி ஒருவாரம் கடந்தும் மயக்கம் தெளியாமல் திவ்யா, மூச்சு விடுவதைத் தவிர உடலில் எந்த அசைவும் இன்றி படுத்தப்படுக்கையாகவே இருந்தார். இதனால் இதனால் மருத்துவர்களும், ராகுலும் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து மருத்துவர்கள் குழு விசாரணை நடத்தினர். அதில், அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து அதிகம் கொடுத்ததால், திவ்யா கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தெரியவந்தது. மருத்துவமனையின் இந்த அலட்சியத்தால் இவர்களின் சந்தோஷமான வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
இதையடுத்து, காதலித்த மனைவியைக் கைவிடாமல் காதலிக்கும்போது, எப்படி நேசித்தோமோ, அதை விட கூடுதலாகக் காதலிக்க வேண்டும் என முடிவு செய்து மருத்துவமனையில் இருந்து திவ்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், வீட்டில் தனி அறையில், மருத்துவ உபகரண உதவிகளுடன் தினமும் காலை தொடங்க மாலை வரை திவ்யாவிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் ராகுல். இப்படி ஒன்று, இரண்டு மாதம் அல்ல கடந்த 5 வருடங்களாக திவ்யாவை நேசத்துடன் பார்த்து வருகிறார்.
வயதான காலத்தில் பெற்றோரையே சுமை எனக் கருதி அவர்களை முகாம்களில் சேர்த்துவிடுவோர் மத்தியில், காதலித்த மனைவியைக் கைவிடாமல், அவரை பாசத்துடன் பார்த்துக் கொள்ளும் ராகுலின் செயல் கிராமத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் தாமாக முன் வந்து ராகுல் மற்றும் திவ்யாவுக்கு உதவி செய்து வருகின்றனர்.