வரலாறு காணாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விலை உச்சத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 100 ரூபாயை கடந்து பெட்ரோல், டீசல் விற்பனை ஆகிறது.
தமிழ்நாட்டில் நீலகிரி போன்ற மலை மாவட்டங்களிலும், சென்னையிலும் பெட்ரோல் 90 ரூபாயை கடந்தும், டீசல் 85 ரூபாய்க்கும் மேலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் மீதான விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும் இதற்கு முக்கிய காரணமாக மோடி பாஜக அரசு விதிக்கும் கலால், செஸ், வாட் போன்ற வரிகளே முக்கியப்பாங்காற்றுகின்றன.
அவ்வகையில், 90 ரூபாய்க்கு மேல் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுவதில் 50 சதவிகிதம் மத்திய மாநில அரகளின் வரி விதிப்புக்கே செல்கிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் அதிகளவில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பெட்ரோல் டீசலின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றில் இருந்து மீளாத இந்திய மக்களை தற்போது விலையேற்றத்தின் மூலம் மோடி அரசு நோகடித்துக் கொண்டிருக்கிறது என பல தரப்பில் இருந்தும் வேதனைக்குரலும் எதிர்ப்புக் குரலும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “இதுவரையில் கண்டிராத வகையில் அற்புதமான இன்னிங்ஸை விளையாடியிருக்கிறது பெட்ரோல் மிகவும் கடினமான சூழ்நிலையில் நன்றாக சதத்தை விளாசியுள்ளது.
முதல் பந்தில் இருந்தே சதத்தை தொடும் அளவுக்கு எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கு இணையாக டீசலின் பார்ட்னர்ஷிப்பும் அபாரம். ஏழை எளிய சாமானிய மக்களுக்கு எதிராக விளையாடுவது என்பது மிகப்பெரிய விஷயம். அதனை பெட்ரோலும், டீசலும் சாத்தியப்படுத்தியிருக்கிறது” என மனோஜ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.