அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக நீண்ட காலமாக நடைபெற்று வந்த வழக்கில், அது, ராம் லல்லாவு அமைப்பின் தரப்புக்குச் சொந்தமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பிரதமர் மோடி முன்னிலையில் கடந்த வருடம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதனிடையே நாடு முழுக்க வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ராமர் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக, வீடுகளுக்குச் சென்று பணம் வசூலித்து வருகின்றனர். இந்நிலையில், ராமர் கோவில் கட்டுவதற்கு நிதி கேட்டு தனது வீட்டுக்கு வந்து சிலர் மிரட்டுவதாக கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி.குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக குமாரசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஜெர்மனியில் ஹிட்லரின் நாசி கட்சி எப்படி அடக்கு முறைகளைக் கையாண்டதோ அதுபோல ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செயல்படுகிறது. ராமர் கோவிலுக்கு நிதி வழங்காதவர்கள் வீடுகள் குறிவைக்கப்படுகிறது. நிதி வழங்கியவர்களின் வீடுகள் வேறுமாதிரி குறியீடு வைக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் ஏதோ நடக்கிறது” என பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு பெண் உட்பட மூன்று பேர் எனது வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்கள் ராமர் கோவிலுக்கு நிதி வழங்க வேண்டும் என அதிகார தோரணையில் கேட்டனர். ராமர் கோவிலுக்கு நிதி திரட்டும் விவகாரத்தில் எந்த மாதிரி வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது?
ஒவ்வொரு ஊரிலும், தெருவிலும் வலதுசாரிக் குழுக்கள் வீடுகளுக்குச் சென்று நிதி திரட்டுகிறார்கள். இந்த பணம் எங்கே செல்கிறது. மேலும், பணம் தராதவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இப்போது நானே மிரட்டலுக்கு ஆளாகியுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் அரசாங்கத்தில் உங்கள் முன்னேற்றம் என்ன? இன்னும் 15 நாட்களில், நீங்கள் பெட்ரோல் விலையை ரூ.100க்கு கொண்டு வருவீர்கள். இது தான் உங்களின் சாதனையாக இருக்கப் போகிறது” என தெரிவித்துள்ளார்.