கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்திற்குட்பட்டது சிக்கயம் மிகனூரு கிராம பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிக்கனகட்டி, கொடகவள்ளி, கொடகவள்ளி ஹட்டி, கோட்டாஹாளு, ஹொசஹள்ளி, அய்யனஹள்ளி ஆகிய கிராமங்கள் உள்ளது. இங்கு 7,500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த பஞ்சாயத்துத் தலைவராக 88 வயதான பாட்டி திராக்ஷகாயணம்மா என்பவர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இவர் 7ம் வகுப்புவரை படித்துள்ளார். இவரின் குடுபத்தினர்கள் வேறுபகுதியில் தங்கியிருப்பதால், திராக்ஷகாயணம்மா மட்டும் தனது சொந்த கிராமத்திலேயே தனியாக வசித்து வருகிறார்.
இந்தப் பஞ்சாயத்தில் கடந்த 2016ம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது மூதாட்டி தனது சொந்த நிலத்தில் குழாய் அமைத்து, மக்கள் பயன்பாட்டிற்குக் குடிநீர் திறந்தார். இப்படி குடிநீர், கல்வி, பெண்கள் பிரச்சனைகளுக்குத் தலையிட்டும், உதவி செய்தும் வருகிறார். அதுமட்டுமல்லாது இந்த வயதிலும் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார்.
இந்நிலையில், கிராம பஞ்சாயத்துத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திராக்ஷகாயணம்மா தாலுகா கிராம வளர்ச்சி அதிகாரியைக் கிராமத்திற்கு அழைத்துள்ளார். அப்போது அதிகாரியிடம், “கிராமத்தில் உள்ள வீடுகளுக்கும் தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும். கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். சீரான சாலை, சுத்தமான குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்ய வேண்டும்.
மேலும் எங்கள் கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள், நபார்டு வங்கி, உலக வங்கிகள் மூலம் ஒதுக்கீடு செய்துள்ள நிதி எவ்வளவு? அந்த நிதியைக் கொண்டு என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது? வளர்ச்சி பணிகள் முடிப்பதற்கான காலக்கெடு எப்போது ?" என அடுக்கடுக்காக அதிகாரியிடம் ஆங்கிலந்திலும், கன்னடத்திலும் பேசினார்.
பாட்டியின் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். இதை அங்கிருந்த கிராம மக்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து15 நாட்களுக்குள் முழு விவவரத்தையும் கொடுப்பதாக சொல்விட்டி பாட்டியிடமிருந்து தப்பித்தோம்... பிழைத்தோம் ... என அதிகாரிகள் நடையைக்கட்டியிருக்கிறார்கள். மேலும் பாட்டியின் ஆங்கில பேச்சைப் பார்த்து கிராம மக்கள் வெகுவாக அவரைப் பாராட்டினர்.