நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம், குடியரசுத் தலைவரின் உரை மக்களின் பிரச்னைகள் குறித்து பேசாமல் ஆளுங்கட்சியின் குரலாக இருப்பதாக குற்றம்சாட்டினார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேசுகையில், “குடியரசுத் தலைவர் செயலகம் அனைவராலும் மதிக்கப்படக் கூடிய ஒன்று. அன்றாட அரசியலுக்கு அப்பால் குடியரசுத் தலைவர் உள்ளார். பேஸ்புக் லைக்ஸ், ட்விட்டர் ரீட்வீட், கருத்துக் கணிப்பு உள்ளிட்ட எதையும் குடியரசுத் தலைவர் கண்டுகொள்ளத் தேவையில்லை.
பாப் பாடகியின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் நம் நாட்டு அரசு, உண்மையான புள்ளி விவரங்களுக்கு பதில் அளிப்பதில்லை.
கடந்த வாரம் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரையில் சொல்லப்பட்டதை விட, சொல்லப்படாததை நினைத்துத்தான் நான் வருத்தப்படுகிறேன். ஆளுக்கட்சியின் குரலாகவே குடியரசுத் தலைவர் உரை இருந்தது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து ஒரு வார்த்தை கூட குடியரசுத் தலைவர் உரையில் இடம் பெறவில்லை” என்று தெரிவித்தார்.
அப்போது பா.ஜ.க எம்.பி.,க்கள் கார்த்தி சிதம்பரத்தின் பேச்சுக்கு, மறுப்பு தெரிவித்து இந்தியில் குரல் எழுப்பினர். இதையடுத்து கார்த்தி சிதம்பரம், “நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு புரியலை” எனக் கூறிவிட்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.
இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.