இந்தியா

“பொது விநியோக திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள்" - அந்தியூர் செல்வராஜ் சாடல்!

ஏழைகளுக்கு உணவளிக்கும் பொது விநியோகத் திட்டத்தை காப்பாற்ற புதிய வேளாண் திட்டங்களை கைவிட வேண்டும் என மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார் அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,

“பொது விநியோக திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள்" - அந்தியூர் செல்வராஜ் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கலைஞர் ஆட்சியில் இருந்தபோது ஏழைகளுக்கு ஒருவேளை உணவாவது சரியாக கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட பொது விநியோகத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் குற்றம்சாட்டினார்.

இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மாநிலங்களவை எம்.பி., அந்தியூர் செல்வராஜ், “கூட்டாட்சி திட்டத்திற்கு குழிபறிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. முதலில் ஜி.எஸ்.டி மூலம் மாநில வரிவிதிப்பு உரிமையைப் பறித்தது.

தற்போது வேளாண் சட்டங்கள் மூலம் மாநில அரசுகளின் கொள்முதல் உரிமையை பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும், ஈரோட்டில் இ.எஸ்.ஐ மருத்துவமனை உடனடியாக அமைக்க வேண்டும். தமிழக மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவி நிலுவைத் தொகையான 2,062 கோடி ரூபாயை உடனடியாக வழங்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், மாநில மொழிகளை அழிக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், எல்.ஐ.சி நிறுவன பங்குகளை விற்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மதுரையில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இதனால் கட்டுமான பணிகள் தொடங்காமல் இருப்பதையும் குறிப்பிட்டு அதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

அசாம், மேற்கு வங்க தேயிலைத் தொழிலாளர்களின் நலனுக்கு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால் வால்பாறை, ஊட்டி, நீலகிரி தேயிலை தொழிலாளர்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

banner

Related Stories

Related Stories