இந்தியா

“கார் பிரேக்கை சரிபண்ண முடியல.. ஹாரன் சத்தத்தை அதிகமா வச்சிருக்கேன்” - பட்ஜெட்டை கிண்டல் செய்த காங்கிரஸ்!

“கார் மெக்கானிக் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் ‘என்னால் கார் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை, அதனால் ஹாரன் சத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறேன்’ என்று சொல்வதைப் போல பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் இருக்கிறது”

“கார் பிரேக்கை சரிபண்ண முடியல.. ஹாரன் சத்தத்தை அதிகமா வச்சிருக்கேன்” - பட்ஜெட்டை கிண்டல் செய்த காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

2021- 2022 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டுக்கு தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை தாரைவார்க்கும் வகையில் இருப்பதாக பொருளாதார அறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “மோடி அரசு, மக்களின் கைகளில் பணம் கொடுப்பதை மறந்துவிட்டு, தனது முதலாளித்துவ நண்பர்களிடம் இந்தியாவின் சொத்துகளை ஒப்படைக்க திட்டமிட்டிருக்கிறது” எனச் சாடியுள்ளார்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பட்ஜெட் குறித்து கூறுகையில், “இந்த பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த வகையிலும் பூர்த்தி செய்யவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது. பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கும் முடிவு மக்களை வெகுவாக பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கார் மெக்கானிக் ஒருவர் தனது வாடிக்கையாளரிடம் ‘என்னால் கார் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை, அதனால் கார் ஹாரன் சத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறேன்’ என்று சொல்வதைப் போல பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் இருக்கிறது” என்று குறிப்பிட்டு மத்திய அரசின் பட்ஜெட்டை கிண்டல் செய்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பட்ஜெட் குறித்து கூறுகையில், “பா.ஜ.க-வின் பட்ஜெட் ஏழை, எளியவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. குறிப்பாக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி போராடி வருகிற விவசாயிகளுக்கு ஆதரவாக பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இல்லாதது, மோடி அரசின் விவசாய விரோத போக்கைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories