இந்தியா

தடுப்பூசி போட்டுக்கொண்டதுபோல் படம் மட்டும் எடுத்தார்களா அதிகாரிகள்? - சர்ச்சை குறித்து விளக்கிய கமிஷனர்!

கர்நாடக மாநிலம் தும்கூரில் அதிகாரிகள் தடுப்பூசியை செலுத்தாமல் உடலின் மீது ஊசியை வைத்து படம் மட்டும் எடுத்ததாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து தும்கூர் கமிஷனர் விளக்கமளித்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டதுபோல் படம் மட்டும் எடுத்தார்களா அதிகாரிகள்? - சர்ச்சை குறித்து விளக்கிய கமிஷனர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி ஜனவரி 16 அன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து ‘கோவாக்சின்’ தடுப்பூசியை உருவாக்கியது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மோடி அரசு அவசரம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, இதுவரை இரண்டு கட்ட பரிசோதனை தரவுகளே வெளிவந்துள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனை தரவுகள் முழுமையாக வெளிவராத நிலையில், அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தடுப்பூசி போட்டுக்கொண்டதுபோல் படம் மட்டும் எடுத்தார்களா அதிகாரிகள்? - சர்ச்சை குறித்து விளக்கிய கமிஷனர்!
-

அதேவேளையில், டெல்லியில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 52 பேருக்கு உடல் இறுக்கம், மயக்கம், தோல் அரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், மக்கள் கொரோனா தடுப்பூசி மீது மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் தும்கூரில் உள்ள தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அப்போது மாவட்ட நலவாழ்வு அதிகாரி நாகேந்திரப்பா, அரசு செவிலியர்கள், கல்லூரி முதல்வர் ரஜனி ஆகியோர் உடலில் தடுப்பூசி போட்டுக்கொண்டதுபோல் படம் பிடித்தனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்டதுபோல் படம் மட்டும் எடுத்தார்களா அதிகாரிகள்? - சர்ச்சை குறித்து விளக்கிய கமிஷனர்!

அப்போது, ஊசியை உடலில் படும்படி வைத்துக்கொண்டு அதைக் குத்தாமல் பொய்யாகப் படம் பிடித்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறும் படங்களும் வீடியோக்களும் மட்டுமே மருந்தின் செயல்திறனை மெய்ப்பிக்கும் சான்றாகி விடாது எனப் பலரும் தெரிவித்துள்ளனர். மக்களை ஏமாற்றிய அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் பலர் கோரியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து தும்கூர் துணை கமிஷனர் டாக்டர் ராகேஷ் குமார் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுப்பதற்காக கேட்டதாலேயே தடுப்பூசி போட்டுக்கொள்வது போல் போஸ் கொடுத்துள்ளனர். சிலர் வேண்டுமென்றே தகறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மருத்துவர் ரஜனி கடந்த 16ம் தேதியன்றே தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ஆங்கில செய்தித் தளத்தின் உள்ளூர் பத்திரிகையாளர் உறுதி செய்துள்ளார். பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று போஸ் கொடுத்த வீடியோக்கள் தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வைரலான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories