3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 50 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். சட்டங்களை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இருந்தும் விவசாயிகள் முழு ரத்து என்ற கோரிக்கையில் வலுவாக நிற்கின்றனர்.
இதுவரை 8 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள் மத்திய அரசு இடையே நல்ல முடிவு எட்டப்படவில்லை. ரத்து ஒன்றே தீர்வு என்று விவசாயிகள் தீர்மானமாக உள்ளனர். இந்நிலையில் இன்று 9-ம் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது.
அதில் மத்திய அரசு சார்பில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், அரசு தரப்பு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.
வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்வது குறித்து வேண்டுமானால் பேசலாம், ரத்து செய்ய முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால் விவசாயிகள் முதலில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அரசு தரப்பு நிர்பந்தித்தது. ஆனால், இதனை ஏற்க விவசாயிகள் தரப்பு மறுத்துவிட்டது.
அரசு நிர்பந்தத்தை பொருட்படுத்தாத விவசாயிகள், 3 வேளாண் சட்டங்களையும் முதலில் திரும்பப் பெற வேண்டும், அதன் பிறகு குறைந்த பட்ச ஆதார விலை தொடர்பாக சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தங்கள் கோரிக்கைக்கு மீண்டும் அழுத்தம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து எந்த உடன்பாடும் எட்டாமல் இன்றைய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக கூட மத்திய அரசு இன்றையதினம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என்று விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டின.
முதலில் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற மறுத்த மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று கூறியது. பின்னர், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக பேச வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்று விவசாயிகள் தரப்பு கூறினர்.
19ஆம் தேதி நடைபெற இருக்கும் 9-ம் கட்ட பேச்சுவார்த்தையில் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே பேச்சுவார்த்தை அஜெண்டாவாக இருக்க வேண்டும் என்று விவசாயிகள் கறாராக தெரிவித்துள்ளனர்.