இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக கடன் வழங்கும் செயலிகள் புற்றீசல் போல முளைத்து, ஏழை-நடுத்தர மக்களை குறிவைத்து வேட்டையாடி வருகின்றன. லோன் ஆப் மூலம் கடன் பெறுவோரிடம், அதிக வட்டி, பிராசஸிங் கட்டணங்கள், கடுமையான அபராதம் விதித்து பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிகளால் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர்.
இதுபோன்ற அங்கீகாரமற்ற கடன் வழங்கும் செயலிகளிடமிருந்து விலகியிருக்கும்படி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மோசடி தொடர்பான வழக்குகளில் சைபர் கிரைம் போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சீன கடன் கொடுக்கும் செயலிகள் மூலமாக அதிக வட்டிக்கு கடன் கொடுத்து அவர்களின் தகவல்களைத் திருடியதாக சீனர்கள் Xioa Yamao (38) Wu Yuanlum(28) மற்றும் இதற்கு உடைந்தையாக பெங்களூரில் போலி நிறுவனம் நடத்தி வந்த இயக்குனர்கள் பிரமோதா மற்றும் பவான் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கடந்த ஜனவரி 2ஆம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சீனர்கள் இருவரும் பாஸ்போர்ட் காலக்கெடு முடிந்தும் இந்தியாவில் பல மாதங்களாக தங்கி இருந்து லோன் ஆப் நிறுவனங்களை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலிஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், 2 சீனர்களும் 46 கணினி மென்பொருள்களை பயன்படுத்தி கடன் பெற்றவர்களின் தகவல்களைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், தாங்கள் வணிக நோக்கிலேயே இதை நடத்தி வருகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனர்கள் 2 பேரும் தங்கள் நாட்டுக்கு உளவு பார்க்க வந்தனரா என்பது குறித்து மத்திய உளவுத்துறை மற்றும் ரா அமைப்பு விசாரணை நடத்துகிறது. மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் 6 நாட்களாக விசாரணை நடத்திய நிலையில், அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.