தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து இயற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் இளைஞர்கள் பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால், மொபைல் கடன் எனும் விபரீத நடைமுறை பலரின் உயிரைக் குடித்து வருகிறது.
கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் நடுத்தர, ஏழை மக்கள் பலரும் அன்றாட செலவுக்கே அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் ஏற்பட்ட தொடர் விளைவுகளான வேலையின்மை, சம்பளக் குறைவு உள்ளிட்ட சிக்கல்களால் பலரும் வட்டிக்கு கடன் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அப்பாவி மக்களைக் குறிவைத்து, அநியாய வட்டிக்கு கடன் வழங்கும் இணைய செயலிகள் புற்றீசல் போல கிளம்பியுள்ளன. ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகளின் விபரீத வலையில், இளைஞர்கள் பலரும் சிக்கித் தவிக்கின்றனர்.
மொபைல் செயலிகள் மூலம் கடன் பெறும்போது மிகக் குறுகிய காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஆனால், வட்டி மிக அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது.
பணத்தைத் திருப்பி அளிக்க ஒரு நாள் தாமதமானாலும், மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், மொபைலில் சேமிக்கப்பட்டுள்ள உங்களது நண்பர்கள் உறவினர்களின் எண்களுக்கு தொடர்புகொண்டு இதுகுறித்து தெரிவிப்போம் என்றும் மிரட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மிரட்டலுக்கு அஞ்சி, வேறொரு செயலி மூலம் பணம் பெற்று முந்தைய கடனை அடைப்பது என கடன் சுமை அதிகரிப்பதால் பலர் மன உளைச்சலடைந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடந்தேறுகின்றன.
ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் பாதுகாப்பற்றவை என்றும் கடன் வழங்கும் செயலிகளால் தற்கொலையும் அதிகரித்து வருவதால் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்றும் தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பல மொபைல் கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அவை வெவ்வேறு பெயர்களில் வர வாய்ப்பிருப்பதால் அரசு தலையிட்டு அவற்றை முழுமையாக ஒழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும்.