உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் 8 மாதங்கள் கடந்த பின்னும் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை தடுப்பதற்காக, கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
இந்தச் சூழலில், கொரோனா வைரஸை தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிட்யூட்டி என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாடு முழுவதும் ஜனவரி 16- ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த தடுப்பூசிகளுக்கான ஒத்திகைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலக நாடுகள் பலவும் தீவிர சோதனைகள் மேற்கொண்ட போதே, தடுப்பூசிக்கு அனுமதி வழங்காத நிலையில், இந்தியாவில் தமாதமாக தொடங்கிய தடுப்பூசி தயாரிக்கும் பணிக்கு, வெகுவிரையிலேயே அனுமதி அளித்தது மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தடுப்பூசி அனுமதி தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், “தடுப்பூசி அவசரமானது அவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சரியான மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளின்றி அனுமானத்தின் அடிப்படையில் கோவாக்சினுக்கு அனுமதி அளித்திருப்பது, இந்திய ஆய்வுக்கட்டமைப்பின் நம்பிக்கையையே சிதைப்பதாக உள்ளது.
ஒரு வாக்சினின் பாதுகாப்பு குறித்து தெளிவான உலக ஆய்வு வரையறை உள்ளது. இந்த அனுமதியும் அங்கீகாரமும் அந்த வரையறையின் படி அமையவில்லை. எந்த ஆய்வுச்சட்டத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு அனுமதித்துள்ளது? என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
ஒருவேளை அரைகுறை ஆய்வுகளோடு வெளிவரும் கோவாக்சின் ஏதேனும் பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது கோவாக்சினின் தோல்வியாக மட்டும் முடியாது. ஒட்டுமொத்தமாக வாக்சின்கள் மீதான நம்பிக்கையையே சிதைத்துவிடும். வெகுசன மக்கள் தடுப்பூசிகளையே புறக்கணிக்கத் துவங்கினால் அதன் விளைவு கொடிதினும் கொடிது.
தவறான வாக்சின் அந்த வைரசையே பலம் பொருந்திய வீரியமானதாக மாற்றிவிடக் கூடாது. கூடவே" இப்போதைய புதிய வீரிய வைரசுக்கும் இத்தடுப்பூசி பயன்படும்; 110 சதவீத பாதுகாப்பு" என்றெல்லாம் கூச்சலிடுவது இந்திய அறிவியல் உலகையே எள்ளி நகையாடச் செய்கின்றது.
தற்சார்பு, இந்திய தயாரிப்பு" சித்தாந்தங்களை தன் அரசியல் ஆயுதமாக எடுக்கும் பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு போலத்தான் இந்த அவசரகதி அங்கீகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார். அதேவேளையில், சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதன் பின்னணி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, பா.ஜ.க சீரம் நிறுவனத்திடம் வாங்கிய நிதிக்கு கைமாறாக இந்த அனுமதியை அளித்தா என்ற சந்தேகம் எழுகிறது.
இது தொடர்பாக, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில தரவுகளை பகிர்ந்துள்ளார். அதில், சீரம் நிறுவனம் பல வருடங்களாக கோடி கணக்கில் பா.ஜ.கவுக்கு நிதி வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் பணம் வழங்கிய தகவலையும் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். 2013 - 2014ம் ஆண்டில் 55 லட்சமும் 2014 - 2015ம் ஆண்டில் 2.50 கோடியும், 2016 - 2017லில் 2 கோடியும் நன்கொடையை பா.ஜ.க பெற்றுள்ள தகவலை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “இந்தியாவில் அவசரகதியில் கொரோனா தடுப்பூசிக்கான அனுமதி வழங்கபட்ட நிலையில், இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டை தயாரிக்கும் serum institute of India என்கிற நிறுவனம் பல வருடங்களாக கோடி கணக்கில் BJPக்கு நிதி வழங்கி இருப்பதை http://myneta.info என்கிற இணையத்தளத்தில் காணலாம்” எனத் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை எம்.பியின் இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியைதையடுத்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. அதேவேளையில் இதுதொடர்பாக பா.ஜ.க சார்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.