இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் - நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள இராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பல ஏற்கனவே சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது, மிகுந்த கவலைக்கும், கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று திரும்பியவுடன், இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்திருப்பதை, பிரதமர் மோடி அவர்கள் கருத்தில் கொண்டு, கண்டனம் தெரிவித்திட முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்!” எனத் தெரிவித்துள்ளார்.