இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களுக்கு முடிவில்லாமல் செல்கிறது. குறிப்பாக இந்துத்வா கும்பலின் அராஜகங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் சிறுபான்மையினர் - தலித் மக்களுக்கு எதிராகச் செய்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பிரச்னைக்குரிய ராமர் கோயில் இடவிவகாரம் நீதிமன்றம் மூலம் முடிவுக்கு வந்தது.
ஆனாலும் அயோத்தியில் ராமர் கோயில் அமைவதை வைத்து தொடர்ந்து வன்முறைகளை ஏற்படுத்த இந்துத்வா கும்பல் முயற்சிக்கிறது. அந்தவகையில்தான் மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டம் மாண்டோசர் அருகே இஸ்லாமிய குடும்பங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் மால்வா மாவட்டம் மாண்டோசர் அருகே பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா என்ற பா.ஜ.கவின் இளைஞர் அமைப்பினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு நிதி திரட்ட ஊர்வலமாகச் சென்றனர். சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் உஜ்ஜைன் பகுதிக்குள் நுழைந்தபோது அங்கு பள்ளிசாலில் தொழுகை நடைபெற்ற நிலையில் வெளியில் நின்று ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட்டு தொழுகையில் ஈடுபட்டவர்களை தொந்தரவு செய்துள்ளனர்.
அப்போது வெளியே வந்த இஸ்லாமியர்கள் சிலர் இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டபோது, பா.ஜ.க இளைஞர் அமைப்பினர் ஆத்திரமடைந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், பள்ளிவாசலின் மினரா மீது ஏறியும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டுவதற்காக அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து மோதல் முற்றி அப்பகுதி வன்முறைக் களமாக காட்சியளித்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.
மேலும் வன்முறைக்கு காரணமானவர்கள் என இஸ்லாமிய பெண்கள் 2 பேர் உட்பட 10க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிலரின் மீது கொலை முயற்சி - வன்முறையைத் துண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அதேநேரத்தில் வன்முறையை ஏற்படுத்திய பா.ஜ.கவின் இளைஞர் அமைப்பச் சேர்ந்த ஒருவரைக் கூட போலிஸார் கைது செய்யவில்லை. அதோடு நிற்காமல், இரண்டு நாட்களுக்குப் பிறகு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், இப்பகுதியில் உள்ளவர்கள் சாலையை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியுள்ளதாகவும், தற்போது சாலை விரிவாக்கப்பணி நடைபெறுவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகவும் கூறி எந்தவித முன்னறிவிப்புமின்றி, அங்குள்ள வீடுகளை இடித்துள்ளனர்.
இதில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அயாஸ் முகமது, வாசிம் அஸ்லம், சதாப் அக்ரம் மற்றும் அல்து அஸ்லம் ஆகியோர் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 80 வீடுகளை, 10 அடி தூரத்திற்கு இருபுறமும் இடித்து அகற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, “பிற்பகல் 2 மணியளவில் சுமார் ஆயிரம் பேர் எங்கள் கிராமத்திற்கு வந்து வேண்டுமென்றே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலவரம் செய்தனர். இந்தக் கலவரத்தின்போது அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.
அப்போது இஸ்லாமிய மக்களின் வீடுகளைச் சூறையாடிய அந்த கும்பல், சில வீடுகளில் இருந்த நகை மற்றும் பணம் சுமார் 9 லட்சத்தைக் கொள்ளையடித்துள்ளனர். மேலும் வீடுகளில் இருந்த பொருட்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.