மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 34 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது.
இதனால் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் தயார் என அறிவித்ததைத் தொடர்ந்து நாளை மத்திய அரசு விவசாயிகளுடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதேவேளையில் விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
அதன் ஒருபகுதியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்தை சேர்ந்த வணிக நிறுவனங்களை முற்றுகையிட்டு விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பல இடங்களில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செல்போன் கோபுரத்தின் இணைப்பை துண்டித்து தங்களது எதிர்ப்பைக் காட்டினார்கள். மேலும், நேற்றைய தினம் பஞ்சாப்பில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான செல்போன் கோபுரங்களை அடித்து நொறுக்கி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 176க்கும் மேற்பட்ட ஜியோ செல்போன் கோபுரங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதுவரை 1,561 செல்போன் கோபுரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மாநிலத்தில் ஜியோ போன்ற செல்போன் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனிடையே விவசாயிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது வேண்டுகோளையும் ஏற்காமல் வன்முறையில் ஈடுபட்டு செல்போன் டவர்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.