உலக நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் 8 மாதங்கள் கடந்த பின்னும் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸை தடுப்பதற்காக, கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,34,964 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,38,648 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத மோடி அரசு, கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்தி அரசியல் லாபம் பெற்றுக்கொண்டது.
குறிப்பாக, கண்டேபிடிக்காத கொரோனா தடுப்பூசியை வைத்து, பீகார் தேர்தலில் தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என பொய்யான வாக்குறுதியை அளித்து வெற்றிபெற்றது. அதாவது பீகார் தேர்தலின் போது, பிரதமர் நரேந்திரமோடி கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், அது பீகார் மக்களுக்கு இலவசமாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் வழக்கம்போல மக்களை ஏமாற்றுவதற்காக அளித்த வாக்குறுதி என அறியாத மக்கள் பா.ஜ.கவிற்கு வாக்களித்தனர். இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஒட்ட மொத்த மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மோடி அறிவித்த வாக்குறுதி முற்றிலும் ஏமாற்று வேலை என்பது தற்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளரின் கூற்றிலிருந்து அம்பலமாகியிருக்கிறது. உலகம் முழுவதும் போடப்படும் தடுப்பூசிகளில் 60% இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகிறது.
தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் யாவும் கொரோனா காலத்தில் மோடி அரசால் உருவாக்கப்பட்டது போல மாய பிம்பத்தை பா.ஜ.க வினர் கட்டமைத்து வருகின்றனர். ஆனால் உண்மையில், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட 6 பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 42 வருடங்களாக இந்தியாவில் இருக்கின்றன.
ஏன் உலகிலேயே மிகப்பெரிய நோய்த்தடுப்பு திட்டத்திற்கான கட்டமைப்பு கொண்டிருக்கும் இந்தியாவில் தான் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடையாது என்பதை பா.ஜ.க அரசு கூறிவருகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி என்ற திட்டம் நடைமுறையில் உள்ளபோது, அதனை தகர்த்து காசு உள்ளவனுக்கே தடுப்பூசி என்ற புதிய திட்டத்தை மோடி அரசு உருவாக்குகிறது.
தடுப்பு மருந்து தயாரிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மோடி அரசு எடுத்த இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும்; நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கவேண்டும் என மருத்துவத்துறை வல்லுர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி விவகாரம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி பெறுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பேசும்போது, ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று பா.ஜ.க அறிவித்தது.
இப்போது, ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய அரசு தெரிவிக்கிறது. உண்மையில், கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.