லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ. 25,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் வங்கியின் அனைத்து கிளைகளிலும் நடப்பு கணக்கு முடக்கத்தால் பல்வேறு துறைகளின் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகி இருப்பதற்கு தீர்வு காணக் கோரி மத்திய நிதி அமைச்சகத்திற்கு கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டு மிகப்பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்த லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இதன் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ரூபாய் 25,000 மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று அனைத்து கிளைகளிலும் ஆன்லைன் முறையில் பண பரிமாற்றம் மேற்கொள்வதில் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் சேமிப்பு கணக்குகளை தவிர்த்து நடப்பு கணக்குகளுக்கு சுமார் ஒரு மாத காலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது என வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் வர்த்தக பரிவர்த்தனை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் கரூர் எம்.பி-யுமான ஜோதிமணி பேசுகையில், “லட்சுமி விலாஸ் வங்கியில் நிதியமைச்சகம் வர்த்தக தடை விதித்துள்ளது. கரூரில் நிதி நிறுவனங்களும், பேருந்து கட்டுமானம், கொசுவலை, ஜவுளி ஏற்றுமதி தொழில்களும் ஒன்றுக்கொன்று ஆதரவாக நின்று வளர்ந்தவை.
ஒரு சிறிய நகரத்தில் இருந்து வங்கியை உருவாக்கியவர்களின் கனவு, தொலைநோக்கு, விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்துறையினரின் பங்களிப்பில் உருவான வங்கியின் இன்றைய நிலை வருத்தமளிக்கிறது.
ஜவுளித்துறை, கொசுவலை தயாரிப்பு, பேருந்து,லாரி உள்ளிட்ட போக்குவரத்து நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களும், எரிவாயு நிறுவனங்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பெருமளவில் லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.
முதலில் ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வாடிக்கையாளர்கள் வங்கிக்கு சென்றபோது நடப்புக் கணக்குகள் மொத்தமாக முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைன் பண பரிவர்த்தனை, NEFT, RTGS ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கனவே பணமதிப்பிழப்பு, தவறாக செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி, மத்திய அரசின் ஆதரவின்மை ஆகியவற்றால் கரூரில் வியாபாரம் மற்றும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் வங்கியில் நடப்பு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் தொழில் துறையினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே வங்கித் துறையின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக 4 வங்கிகள் மோசமான நிலையை அடைந்துள்ளன.
வங்கிகள் மூலமே தொழில்துறையினர் வரவு செலவு செய்வதாலும் பொருளாதார மந்தநிலை காரணமாகவும் யாரிடமும் ஒரு மாதத்திற்கு தேவையான கையிருப்பு இல்லை. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மத்திய அமைச்சகம் தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன்” என ஜோதிமணி எம்.பி தெரிவித்தார்.