இந்தியாவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி செய்யப்படுகிறது. இதன்பிறகு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில், தேர்வில் தோல்வி, வறுமை என பல்வேறு காரணங்களால் மாணவர்கள் தங்களுடைய பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் போகிறது. இது பள்ளி இடைநிற்றல் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் மேற்கு வங்கத்தில் குறைவாக உள்ளதாக ஏ.எஸ்.இ.ஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் மித்ரா. இவர் அவரது சிறு வயதிலேயே தந்தையை இழந்து, அவரின் தாய்மாமாக்களின் உதவியுடன் வாழ்ந்து வருகிறார். குடும்ப வறுமைக்கு இடையேயும் பள்ளிக் கல்வியை மித்ரா தொடர அவரது தாய்மாமாக்கள் உதவி உள்ளனர்.
ஆனால் உயர்கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனி என்பதை உணர்ந்த மித்ரா, மேலும் கல்லூரிக்குச் சென்று அதற்காக ஆகும் செலவினங்களை அவரது தாய்மாமாக்களை சுமக்க வைக்க விரும்பவில்லை.
அதேவேளையில், கல்வியை பெற முடியாமல் போன வருத்தத்தில் இருந்த மித்ரா, மேற்கு வங்க அரசின், ‘கன்யாஸ்ரீ பிரகல்பா’ என்ற திட்டம் மூலம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை பெற்றார். அரசு அளித்து வந்த உதவித் தொகையை வைத்து சுந்தர்பன் ஹாஸி தேசரத் கல்லூரியில் வங்காள மொழியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
அதேபோல், பாயல் பௌரி என்ற பெண், அவரது தந்தை, வறுமை காரணமாக 2017ம் ஆண்டில் தான் 8ம் வகுப்பில் இருந்தபோது அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார் என்றும் அப்போது கல்விக்காக அரசு அளித்த உதவித்தொகையினால் அத்தகைய முடிவு கைவிடப்பட்டதாகவும் பாயல் நினைவுகூர்ந்தார். 2013 ஆம் ஆண்டில் மேற்கு வங்க அரசு தொடங்கிய இரு அடுக்கு திட்டத்தின் மூலம் இதுவரை 66,91,826 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தில் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 1,000 மானியம் வழங்கப்படுகிறது. 18 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் ரூ. 25,000 ஒரு முறை மானியம் வழங்கப்படுகிறது. தற்போது மேற்கு வங்க அரசின் இந்தத் திட்டம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
அதேபோல் தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இதனால், கிராமப்புறத்தில் இருந்து பள்ளி விடுப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது என பின்தங்கிய வகுப்புகள் நலத்துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், இந்த திட்டம் மூலம் சுமார் 85 லட்சம் மாணவர்கள் இதுவரை மிதிவண்டிகளைப் பெற்றுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள 800 திட்டங்களில், இந்த ஆண்டு செப்டம்பரில் இ-அரசு பிரிவின் கீழ் சிறந்த திட்டமாக மேற்கு வங்க அரசின் ‘சபூஜ் சத்தி’ தேர்வு செய்யப்பட்டது. ‘சபூஜ் சத்தி’, ‘கன்யாஸ்ரீ பிரகல்பா’ சர்வதேச விருதை பெற்ற இரண்டு திட்டங்களும் மாநிலத்தில் பள்ளி விடுப்பு விகிதங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த திட்டங்களின் வெற்றி சமீபத்திய ஆண்டு கல்வி அறிக்கை (ASER) 2020 இல் பிரதிபலித்தது.
அந்த வகையில் ஆண்டு மாநிலக் கல்வி அறிக்கை (ஏஎஸ்இஆர்) அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேசிய இடைநிற்றல் விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால், மேற்கு வங்கத்தில் 3.3 சதவீதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பெரிய மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா மற்றும் ராஜஸ்தானில் இடைநிற்றல் விகிதம் முறையே 11.3 சதவீதம், 14 சதவீதம் மற்றும் 14.9% ஆக உள்ளது. அதேபோல மேற்கு வங்கத்தில் 99.7 சதவீத மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் பெரிய மாநிலங்களான உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிராவில் புத்தக விநியோகம் முறையே 79.6 சதவீதம், 60.4 சதவீதம், 95 சதவீதம், 34.6 சதவீதம், 80.8 சதவீதமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பெண் குழந்தைகள் உட்பட எந்தவொரு குழந்தையும் பண நெருக்கடியால் படிப்பைக் கைவிட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் செயல்பட்டோம். இதற்காக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை வழங்கினோம். இதுவே இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறையக் காரணமாக இருந்தது.
பெருந்தொற்றுக் காலத்தின்போதும் மாநிலப் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்குப் பாட உபகரணங்களை வழங்கி வருகிறது” என மேற்குவங்கப் பாடத்திட்டக் குழுத் தலைவர் அவீக் மஜூம்தார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக இருந்த நிலை, அ.தி.மு.க அரசின் 10 ஆண்டுகால ஆட்சியால் முற்றிலும் பறிபோனது. மத்திய பா.ஜ.க அரசின் கல்வியைக் காவிமயமாக்கும் திட்டத்தால் தமிழகம் கல்வியில் பின் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.