ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே நந்தியால் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம். இவர் நந்தியாலில் உள்ள நகைக் கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு சில மாதங்களுக்கு முன்பு நகைகள் திருட்டு போன சம்பவம் நடந்துள்ளது.
இதனால் கடையின் உரிமையாளர் அப்துல் சலாம் தான் நகைகளை திருடியதாக சந்தேகித்து அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த அப்துல் சலாம், அப்பகுதிலேயே வாடகை ஆட்டோ ஓட்டத் தொடங்கியுள்ளார். முழுமையான விசாரணை நடைபெறாத நிலையில், கடை உரிமையாளரும், காவல்துறையினரும் தொடர்ந்து அப்துல் சலாமை துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதனால் மனஉளைச்சல் அடைந்த அப்துல் சலாம் அவரது மனைவி நூர்ஜாஹான், மகள் சல்மா மற்றும் மகன் தாதி ஆகியோருடன் கடந்த 3ம் தேதி கவுக்லுரு கிராமத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு அப்துல் சலாம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பதிவு செய்த விடியோவில், கண்களில் கண்ணீருடன் குரல் நடுங்க, அப்துல் சலாம் பேசுகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என அனைவரும் வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.
அப்போது அப்துல் அழத்தொடங்கியதும் அவரது மனைவியும் அழத்தொடங்குகிறார். பெற்றோர்களின் அழுகையை குழந்தைகள் இரண்டு பேரும் அப்பாவியாக பார்த்துக்கொண்டிருக்கிறாரகள். அப்போது அழுகையுடன் பேசிய அப்துல், “நான் எந்த தவறும் செய்யவில்லை; எனக்கும் திருடு போன நகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
போலிஸாரின் சித்தரவதையை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் மரணமாவது மன அமைதியைக் கொடுக்கும் என தற்கொலைக்குத் துணிந்துள்ளோம்” எனச் சொல்கிறார். அப்துல் வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டார். இதனையடுத்து அப்துலை விசாரித்து வந்த போலிஸார் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.