அமெரிக்காவில் உள்ள வலதுசாரி இயக்கங்களின் பக்கங்களுக்குச் சார்பாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுகிறது என அண்மையில் பெரும் சர்ச்சை நிலவியது.
குறிப்பாக வலதுசாரி ஆதரவாளர்களின் வெறுப்பை விதைக்கக்கூடிய பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என ஆதாரங்களுடன் முன்வைத்து கேள்வி எழுப்பிய மூத்த பொறியாளர் ஒருவரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்தது பெரும் பரபரப்புக்கு வித்திட்டது.
அதேபோல இந்தியாவிலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி மற்றும் இந்துத்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பதிவிடும் வெறுப்புணர்வு பேச்சுகளை ஃபேஸ்புக் நிறுவனம் தடை செய்வதில்லை என்றும், மாறாக அரசின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டும் காங்கிரஸ் தலைவர்களின் பதிவுகளை திட்டமிட்டு ஃபேஸ்புக் நீக்குவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருந்தார்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை “வெறுப்பு பேச்சுகளுக்கான ஃபேஸ்புக்கின் விதிகள் இந்திய அரசியலோடு முரண்படுகிறது” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தது.
இதனை பகிர்ந்த ராகுல் காந்தி “பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்ஸும், வெறுப்பையும், போலிச் செய்திகளையும் பரப்பி வாக்காளர்களை தன் வசமாக்குகின்றன எனவும் குற்றஞ்சாட்டியதோடு, இந்திய அதிகாரிகளிடம் விசாரிக்குமாறு ஃபேஸ்புக்கின் சி.இ.ஓ மார்க் ஸக்கர்பெர்க்குக்கு கடிதமும் எழுதப்பட்டது.
இதனையடுத்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஃபேஸ்புக்கின் இந்திய, தென் மற்றும் மத்திய ஆசிய பொதுக் கொள்கை இயக்குநர் அன்கி தாஸிடம் கடந்த 24ம் தேதி சுமார் 2 மணிநேரம் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், தற்போது அன்கி தாஸ் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிராந்திய பொதுக்கொள்கை இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த பதவி விலகலுக்கு அவர் மீது எழுந்துள்ள சர்ச்சை காரணமில்லை என்றும், பொது சேவையில் அவர் ஈடுபட போவதாகவும் ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.