அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கிய 50% மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தக் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதத்தை எடுத்து வைக்காமல், இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க அரசு துணைபோயுள்ளது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மருத்துவ படிப்பில் BC, MBC-க்கான 50% இடஒதுக்கீட்டை இவ்வாண்டு வழங்கமுடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதியை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே இருக்கும் 27% இடஒதுக்கீட்டை தரவும் பா.ஜ.க அரசு மறுக்கிறது. இது அ.தி.மு.க அரசின் அடிமைத்தனத்தால் தமிழகத்துக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகும்.
பட்டியலின மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் தர முடியாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததன் மூலம் பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மாணவர்கள் மருத்துவம் படிக்கவேக்கூடாது - அரியவகை ஏழைகள் மட்டும் படித்தால் போதும் என்று பா.ஜ.க அரசு சொல்லாமல் சொல்லியுள்ளது.
கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் எடுபிடி அரசு - வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் பா.ஜ.கவுக்கு துணைபோயுள்ளது. இதை தமிழக மாணவர்கள் மன்னிக்க மாட்டார்கள். பா.ஜ.கவுக்கு நெருக்கடி கொடுத்து 50% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.