ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி, நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவர்களின் நினைவைப் போற்றும் வகையில் “காவலர் வீரவணக்க நாள்” கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தாண்டு கொரோனா பாதிப்பு, ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பட்டுகளுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “அமைதியை நிலைநாட்டுவதில் உயிர் நீத்த தியாக சீலர்களான காவல்துறையினருக்கும் வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
“காவல்துறையில் பணியாற்றித் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து - வீரமரணமடைந்த போலீசாருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இன்று (21.10.2020) நாடு முழுதும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
நாட்டின் மற்றும் மாநிலத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பில் - பொது அமைதியை நிலைநாட்டுவதில் உயிர் நீத்த போலீசாருக்கு - குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் சீர்மிகு பணியாற்றி - உயிர் நீத்த தியாக சீலர்களான போலீசார் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.