மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது. என்.டி.ஏ வெளியிட்ட தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் கண்டறியப்பட்டன.
பல மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களை விட தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல மாநில தேர்ச்சி விகிதங்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் விமர்சனந்த்தைக் கிளப்பியது. இதையடுத்து தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டன. பின்னர் திருத்தப்பட்ட பட்டியல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் இத்தகைய அலட்சிய செயல்களையும், குளறுபடிகளையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கண்டித்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “திரிபுராவில் 3,536 பேர் நீட் எழுதி, 88,889 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு முடிவு வந்துள்ளது. ஒவ்வொரு மாணவரும் 25 முறை தேர்வு எழுதினால்கூட இவ்வளவு பேர் தேர்ச்சியடைய முடியாது. இந்த குளறுபடிகள், நீட் ஓர் அயோக்கியத்தனம் என்பதை நிரூபித்துள்ளது.
மேலும், உ.பி.யில் 1,56,992 பேருக்கு 7,323 பேர் தான் தேர்ச்சி. ஆனால், 60% பேர் தேர்ச்சி என்கிறது தேசிய தேர்வு முகமை. இப்போது சர்சையானதும் முடிவை நீக்கிவிட்டனர். மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே ஆள்மாறாட்ட புகார்கள் சந்தி சிரித்த நிலையில் இப்போது இந்த குளறுபடி வேறு.
ஒரு தேர்வு முடிவை கூட சரியாக வெளியிட வக்கற்றவர்கள் தான் 'தரம்' என்று சொல்லி அடிமைகள் துணையோடு, அனிதா உட்பட 13 மாணவர்களை கொலை செய்துள்ளனர். இவ்வளவு குளறுபடியுள்ள நீட் தேர்வால் டாக்டர் ஆகிறவர்களை சர்வதேச மருத்துவ சமூகம் புறக்கணிக்கும் அபாயம் உள்ளது. நீட்டை உடனடியாக ரத்து செய்க.” என வலியுறுத்தியுள்ளார்.