தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர் குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடே கொந்தளித்த போது, பா.ஜ.க அரசு பிடிவாதமாக தேர்வை நடத்தியது.
தமிழகத்தில் மட்டும் இந்தத் தேர்வை சுமார் ஒரு லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில், பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள பா.ஜ.க-வினரும்,பா.ஜ.க ஆதரவாளர்களும் நீட் முடிவுகளைக் கொண்டு நீட் தேர்வை திணிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
நீட் தேர்வுகளில் இந்தாண்டு தேர்ச்சி பெற்ற பெரும்பான்மையானோர் இரண்டாவது முறையாக இந்தத் தேர்வை எழுதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பலரும் தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தவர்கள்.
அரசுப் பள்ளிகளில் படித்து வெற்றி பெற்ற வெகுசிலரும், இரண்டாண்டுகளை நீட் தேர்வுக்காகவே ஒதுக்கி, கடன் வாங்கியோ உதவி பெற்றோ நீட் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தவர்கள் என்பதே எதார்த்தம். நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கப்பட்டிருப்பதை ஏற்க மறுத்து, நீட்டுக்கு ஆதரவான கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிப்போர், உயர்ந்திருக்கும் தேர்ச்சி சதவிகிதத்தை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதுதான் நீட் தேர்ச்சியே தவிர, தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் மருத்துவர்கள் ஆகமுடியாது என்பதை தெளிவாக மறைக்கின்றனர்.
பா.ஜ.க-வை சார்ந்த பலரையும் போலவே, தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு குறித்த உண்மைகளை திட்டமிட்டு மறைத்து, தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
தனியார் பயிற்சி மையத்திற்கு ஆதாயமளிக்கும் நோக்கில், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் குறித்த தனியார் பயிற்சி மையத்தின் விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தனியார் பயிற்சி மையங்கள் பணம் கொழிக்கவே நீட் தேர்வு பயன்படும் என்றும், பா.ஜ.க அரசு அவர்களுக்கு சாதகமாக செயல்படுவதற்காகவே நீட் தேர்வை கைவிட மறுக்கிறது என்றும் தொடர்ந்து குற்றம்சாட்டப்படும் நிலையில், பா.ஜ.க-வினர் தனியார் பயிற்சி மையங்களைக் கொண்டாடுவது இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக அமைகிறது.