பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்கள், குழந்தைகள், தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டும், சட்ட ஒழுங்கை கடைபிடிக்காமலும் சுற்றித்திரியும் பா.ஜ.க ஆதரவாளர்கள் மற்றும் குற்றப் பிண்ணனி கொண்டவர்களுக்கு அம்மாநில அரசு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் கூட, இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை, கொலை என உத்தர பிரதேசத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், தற்போது ரேஷன் கடைகளை ஏலம் விடுவதில் ஏற்பட்ட தகராறின் போது பா.ஜ.க பிரமுகர் ஒருவர், போலிஸார் முன்னிலையிலேயே ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரேதசம் மாநிலம் பலியா மாவட்டத்தில் துர்ஜான்பூர் பகுதியில் அரசு சார்பில் கட்டப்பட்ட ரேசன் கடை சுயஉதவி குழுக்களுக்கு ஏலம் விட முடிவு செய்யப்பட்டு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மைதானத்தில் கூடாரம் அமைத்து நடைபெற்ற கூட்டத்தில், துணை மாஜிஸ்திரேட் (எஸ்.டி.எம்), வட்ட அலுவலர் (சி.ஓ) மற்றும் நிலைய அதிகாரி, போலிஸ் மற்றும் ஜகதம்பா சுய உதவிக்குழு மற்றும் சிவசக்தி சுய உதவிக்குழு என பலர் கட்சியினர் கலந்துக்கொண்டனர்.
அப்போது, கூட்டம் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே பா.ஜ.கவின் ஆதரவு சுய உதவிக்குழுவுக்கும் மற்றக் குழுவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஏலம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குழுவின் தலைவரும், பா.ஜ.க முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவின் நிர்வாகியுமான தீரேந்திர பிரதாப் சிங், தனது கைத்துப்பாக்கியால், தனக்கு போட்டியாக செயல்பட்ட ஜெய் பிரகாஷ் பால் (45) என்பவரை சுட்டுத் தள்ளினார்.
தப்பியோடிய தீரேந்திர பிரதாப் சிங், பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங்குக்கு மிகவும் நெருக்கமானவர். அவரை போலிஸார் தேடி வரும் நிலையில், “இது எங்கும் நிகழக்கூடிய ஒரு விபத்து. இந்த சம்பவத்தில், இரு தரப்பிலிருந்தும் கல் வீசப்பட்டது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட தீரேந்திர பிரதாப் சிங் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்லியா துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சித்துள்ளனர்.