ஆந்திரா கடற்கரையை மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காக்கிநாடா அருகே கரையைக் கடந்ததால் ஐதராபாத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 செ.மீ மழை பெய்துள்ளது.
தெலுங்கானாவில் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் ஒன்றான ஐதராபாத்தில் வரலாறு காணாத மழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.
இதனையடுத்து அந்த நகரத்தின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது, இந்த நிலையில் மழை வெள்ளத்தில் ஒருவர் அடித்துச்செல்லப்படும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதறவைத்திருக்கிறது.
இதேபோல் குடியிருப்பு பகுதிக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்படும் காட்சிகளும் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
மேலும் அதீத மழைக் காரணமாக ஆறு, குளங்கள் மற்றும் அணைகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு மாற்று இடங்களில் உணவு உறைவிடம் கொடுத்துத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நகரின் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன மேலும் நேற்று இரவு பெய்த கன மழையால் பெண்ட்லகுடா நகரத்தில் உள்ள முகமதியா ஹூல்ஸ் பகுதியில் வீடு இடிந்து விபத்துக்குள்ளானதில் 2 மாத குழந்தை உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் மீட்கப்பட்ட சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
நகரின் உள்கட்டமைப்பு மற்றும் சரியான வடிகால் வசதிகள், சட்டவிரோத ஆக்கிரமிப்பு உள்ளிட்டவையின் காரணத்தால் தான் மொத்த நகரும் வெள்ளத்தில் மிதக்கிறது என்று புகார்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.