வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட மத்திய அரசு கடந்த 10 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது. விவசாயத்துறைச் செயலாளர் சஞ்சய் அகர்வால் அழைப்பு விடுத்திருந்த இந்த பேச்சுவார்த்தையை விவசாய சங்கங்கள் புறக்கணித்தன.
மத்திய அரசு விடுத்த அழைப்புக் கடிதத்தில், வேளாண் சட்டங்களை விவசாயிகள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்கிற கருத்தை முன்வைத்து விவசாயிகள் சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதனை விவசாய சங்கங்கள் நிராகரித்தனர்.
இதனைத் தொடர்ந்து நாளை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கலந்துகொள்ளப் போவத்தில்லை என்று அதன் தலைவர் பல்பீர் சிங் கூறியுள்ளார். வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் குழுவிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அகில இந்திய விவசாய சங்க கூட்டமைப்பு மத்திய அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளது. இந்த கோரிக்கைகள் ஏற்கும் வரை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.