பாஜக ஆட்சியமைத்து வரும் உத்தர பிரதேசம் குற்றச்செயல்களுக்கு பெயர் போன மாநிலம் என்பது நாடறிந்த ஒன்று. ராம ராஜ்ஜியம் அமைப்போம் எனக் கூறிக்கொண்டு நாள்தோறும் பல்வேறு வகையிலான சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையே அம்மாநிலம் சந்தித்து வருகிறது.
அண்மையில் ஹாத்ரஸில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த சம்பவத்தின் பரபரப்புகள் ஓய்வதற்குள் உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகிறது.
அந்த வகையில், லக்னோவில் நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு போதை வஸ்துக்களை கொடுத்து தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கிய இளைஞர் அந்த பெண்ணை தன்னுடைய இசைவுகளுக்கு பணியும்படி மிரட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2018ம் ஆண்டு உத்தர பிரதேசத்திற்கு பணி நிமித்தமாக வந்த நேபாளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் லக்னோவில் உள்ள தோழி ஒருவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த தோழி மூலம் துபாயில் உள்ள லக்னோவைச் சேர்ந்த பிரவீன் ராஜ்பால் யாதவ் என்ற நபருடனான நட்பு நேபாள பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது.
பின்னர், உடன் தங்கியிருந்த பெண்ணிடம் கொடுத்து வைத்திருந்த தனது 1.5 லட்சம் பணத்தை அந்த நேபாள பெண் கேட்டதை அடுத்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை துபாயில் உள்ள பிரவீனிடம் அந்த நேபாள பெண் தெரிவிக்க அதற்கு லக்னோவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துக் கொடுத்து அங்கு தங்கும் படி கூறியுள்ளார்.
இதனையடுத்து நேபாள பெண் அங்கு சென்றதும், 2 நாட்கள் கழித்து பிரவீன் துபாயில் இருந்து லக்னோ வந்திருக்கிறார். ஹோட்டலில் தங்கியிருந்த பெண்ணை சந்தித்து அவருக்கு போதை வஸ்துக்களை கொடுத்து மயக்கமாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததோடு இல்லாமல் அதனை போட்டோ மற்றும் வீடியோக்களாகவும் பிரவீன் பதிவு செய்திருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் லக்னோவில் உள்ள வேறு இடத்துக்கும் அழைத்துச் சென்று அங்கும் அந்த நேபாள பெண்ணை பிரவீன் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், இது குறித்து போலிஸிடம் கூறினால் போட்டோ, வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் அந்த பெண்ணை மிரட்டியிருக்கிறார். மேலும், தனக்கு தெரிந்த போலிஸை அழைத்து வந்த பிரவீன் இது தொடர்பாக சமரசம் செய்துக்கொள்ள முற்படுமாறு கூறியுள்ளார்.
இதனால், உத்தர பிரதேச போலிஸ் மீதான நம்பிக்கையை இழந்த அந்த பெண், மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள தனது நேபாள நண்பரை சந்திக்க லக்னோவில் இருந்து காரில் தப்பித்துச் சென்றிருக்கிறார். செப்டம்பர் 30ம் தேதி நாக்பூர் சென்ற அவர், கோரடியில் உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விவரித்ததும் அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, லக்னோவின் சின்ஹாட் காவல் நிலையத்துக்கு அனுப்பி விசாரணை மேற்கொள்ளுமாறு கூறியிருக்கின்றனர்.