இந்தியா

“பெற்றோர்கள்தான் பெண்களை அடக்கமாக வளர்க்க வேண்டும்” - பா.ஜ.கட்சி எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு!

ஹாத்ரஸ் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆதரவாக பேசாமல் மேன்மேலும் பெண்களையே குறை கூறும் வகையில் பா.ஜ.கட்சி எம்.எல்.ஏ., பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“பெற்றோர்கள்தான் பெண்களை அடக்கமாக வளர்க்க வேண்டும்” - பா.ஜ.கட்சி எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாடுமுழுவதும் வெகுவாக அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2018ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவாகி இருந்தது. இதுவே, 2019ம் ஆண்டில் 4 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக் கொண்டால், 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவிகிதமும், பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவிகிதம் வரையும் அதிகரித்துள்ளது. மேலும், தலித் பெண்களுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 11,829 வழக்குகள் பதிவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹாத்ரஸில் தலித் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக எதிர்கட்சிகள் கடுமையான போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன.

ஆனால் உத்தர பிரதேசத்தின் முதலமைச்சராக இருக்கக் கூடிய யோகி ஆதித்யநாத்தோ பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆதரவான நடவடிக்கையை எடுக்காமல் குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலேயே செயல்பட்டு வருகிறார். இதனால் ராம ராஜ்ஜியம் எனக் கூறிக்கொண்டு அப்பாவி பெண்களை வல்லுறவுக்கு இரையாக்கி வருகின்றனர் எனவும் கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஹாத்ரஸ் கொடூரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில பல்யா தொகுதியின் பா.ஜ.கட்சி எம்.எல்.ஏ., சுரேந்திர சிங், அரசாங்கத்தால் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நல்லவற்றை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். கலாசாரத்தையும், பண்புகளையும் அடக்கமாகவும் பேச கற்றுத்தர வேண்டும் எனக் கூறியுள்ளார். பா.ஜ.க., எம்.எல்.ஏ.,வின் பேச்சு மக்களிடையே மேலும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரேந்திர சிங்கின் இந்த பேச்சு ஆர்.எஸ்.எஸ். பேரினவாதத்தின் மனநிலை எனக் குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories