உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோரிடம் கூட ஒப்படைக்காமல் உத்தர பிரதேச காவி போலிஸாரே எரியூட்டினர். இது தேசிய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்புகளோடு போராட்டங்களும் வெடித்துள்ளன. நாடே கொந்தளிக்கும் வகையிலான சம்பவம் நடந்திருக்கும் போது பிரதமர் மோடி இது தொடர்பாக இதுவரையில் ஒரு ட்விட்டர் பதிவு கூட இடாதது மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அரங்கேறியுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் 15 வயது சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் 28ம் தேதி ஜாம்நகரின் மஹாதேவ் நகரில் நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி, தர்ஷன் பாட்டியா, மிலன் பாட்டியா மற்றும் தேவ்கரன் கட்வி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் இந்த பாலியல் குற்றத்தில் சம்பந்தபட்ட மோஹித் பாட்டியா என்பவரை போலிஸார் தேடி வருகின்றனர்.
முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரை சந்திக்கச் சென்ற அந்த சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து கூட்டாளிகள் நால்வரும் இணைந்து அந்த சிறுமியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என டி.எஸ்.பி. ஜடேஜா கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி மற்றுமே வளர்ச்சி கிடையாது, சமூக கலாசாரங்களும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா என்றும் பதிவிட்டுள்ளார்.