உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அந்தப் பெண் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த உ.பி போலிஸார், நேற்று அதிகாலை தகனம் செய்தனர். போலிஸார் வலுக்கட்டாயமாக உடலைத் தகனம் செய்ததாக பலியான பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 4 பேருக்கும் உரிய தண்டனை வழங்கக்கோரி பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, திரிணாமுல் எம்.பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் மீது உ.பி போலிஸார் அத்துமீறலில் ஈடுபட்டது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியின் முக்கிய போராட்டக்களமான ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டு முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சி.பி.ஐ.எம் பொதுச் செயலாளார் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலகும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.