பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமை குற்றம் அதிகம் நிகழும் மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது.
இந்நிலையில், கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு உயிரிழந்த தலித் பெண்ணின் உடலை பெற்றோர் அனுமதியின்றி போலிஸார் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த19 வயதான தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த போது நான்கு இளைஞர்களால் கடந்தப்பட்டு கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் போது குற்றவாளிகள் பற்றி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் நாக்கை வெட்டியுள்ளனர். மேலும், அவரது கழுத்து, முதுகு பகுதியில் கடுமையாக தாக்கியதன் விளைவாக கொடூரமான ரத்த காயங்களுடன் சாலையில் வீசிப்பட்ட நிலையில் கிடந்தார்.
இந்த சம்பவத்தின் போது அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் போலிஸார் விரைந்து வந்த பெண்ணை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த செப்டம்பர் 14ம் தேதி நடந்த நிலையில், அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறப்பதற்கு முன்பு அந்தப் பெண் போலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, சந்தீப், லவ்குஷ்,ரவி மற்றும் ராம்குமார் ஆகிய 4 இளைஞர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் உடலை சொந்த கிராமத்துக்கு போலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டது. அப்போது உடலை இரவோடு இரவாக நல்லடக்கம் செய்யயும் படி போலிஸார் பெண்ணின் குடும்பத்தினரிடன் வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவிக்கவே போலிஸாரே உடலை கைப்பற்றி, நள்ளிரவு ஒரு மணியளவில் உடலை தகனம் செய்தனர். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி போலிஸார் செய்த இந்த அராஜக செயலை பலரும் கண்டித்துள்ளனர்.
கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாகி பலியான தலித் பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும், பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்புக்கான எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாத மாநிலம் என்றால் அது யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தர பிரதேசம்தான் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.