காஷ்மீரில் ஓராண்டுக்கு மேல் வீட்டுச் சிறையில் வைத்திருக்கும் மெகபூபா முஃப்தியை எப்போது விடுவிக்கத் திட்டம் உள்ளது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரை இரண்டாகப் பிரித்து சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. அதற்கு முன்பே ஜம்மு காஷ்மீரின் பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதில் பலர் அண்மையில் விடுவிக்கப்பட்டாலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட இன்னும் சிலர் வீட்டுச் சிறையிலேயே வைத்துள்ளது மத்திய மோடி அரசு. இந்நிலையில், மெகபூபாவை விடுவிக்கக் கோரி அவரது மகள் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, எத்தனை நாட்களுக்கு வீட்டு சிறையில் வைத்திருப்பீர்கள்? ஓராண்டுக்கு மேலாக எந்த அடிப்படையில் சிறைவைக்கப்பட்டுள்ளார்? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் சிறை வைத்திருக்கத் திட்டம் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சோலிசிட்டர் இதனை உத்தரவில் பதிவு செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் ஒருவாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.