கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் விஜய் பி நாயர். இவர் நடத்தும் யூ-ட்யூப் சேனலில், கடந்த மாதம் கேரளப் பெண்களை மோசமான வார்த்தைகளில் சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் பெண்ணியவாதிகளின் உள்ளாடைகள் குறித்தும், பாலியல் தொழிலாளர்கள் என்றும் மோசமான முறையில் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு கேரளாவில் உள்ள பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சமூக ஆர்வலர்கள் விஜய் நாயர் மீது கேரள மகளிர் ஆணையம், சைபர் செல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உள்ளிட்டோரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பிரபல சினிமா டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி, செயற்பாட்டாளர்களான தியா சனா, லட்சுமி ஆகியோர் விஜய் பி.நாயர் வீட்டிற்குச் சென்று அவர் மீது கரி ஆயிலை ஊற்றினர். மேலும் விஜய் பி.நாயரின் லேப்டாப்பை சேதப்படுத்தி பெண்களை ஆபாசமாக பேசுவர்களுக்கு இது தகுந்த பாடம் எனத் தெரிவித்தனர்.
இதனிடையே விஜய் பி.நாயர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி தலைமையிலான 3 பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனாலும் அவர்களின் இந்த செயலுக்கு கேரளா மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, “பெண்களுக்கு எதிரான ஆபாசமான கருத்துகளை பதிவிட்டு வந்த விஜய் பி.நாயரின் செயல் மிகவும் மோசமானது. அவரை தட்டிக்கேட்ட பாக்யலட்சுமி உள்பட 3 பேருக்கும் பாராட்டுகள்.
நம் குடும்ப உறுப்பினர்களை யாராவது அவமதித்திருந்தால் என்ன செய்வோம் என்ற அதே வேதனையுடன் சமூகம் இத்தகைய பதிவுகளை கருத வேண்டும். பெண்களை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பணம் தேடும் முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. இதுபோன்றவர்களுக்கு எதிராகப் போராட பொதுமக்கள் முன்வர வேண்டும். இதுபோன்ற சேனல்களை நாம் ஆதரிக்கக்கூடாது. அவற்றின் பதிவுகளையும் பகிரக்கூடாது” எனத் தெரிவித்தார்.