பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் வாஜ்பாய் ஆட்சிகாலத்தின் போது மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து உடல் உபாதை பிரச்சனைக்களால் ராணுவ மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் உடல் நலம் மிகுந்த மோசமடைய ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜஸ்வந்த் சிங். தொடர்ந்து மூன்று மாதங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த ஜஸ்வந்த் சிங், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜஸ்வந்த் சிங் மறைவு குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான ஜஸ்வந்த் சிங், மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
தி.மு.க சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய துயர்மிகு நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.