இந்தியா

“வேளாண் மசோதாவை ஆதரித்த பழனிசாமி அரசை பிரதமர் மோடி பாராட்டியதில் ஆச்சரியமில்லை” : மு.க.ஸ்டாலின் சாடல்!

முதல்வர் பழனிசாமி அரசை பாராட்டும் நிர்ப்பந்தம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டது ஏன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“வேளாண் மசோதாவை ஆதரித்த பழனிசாமி அரசை பிரதமர் மோடி பாராட்டியதில் ஆச்சரியமில்லை” : மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

"தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் மூச்சுத் திணறி 'கொரோனா எப்போது குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்' என்று கூறி முதலமைச்சர் பழனிசாமியே கைவிட்டுவிட்ட நிலையில், அவர் தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது எனப் பாராட்டும் நிர்ப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டது ஏன்?" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதிலும், தினமும் நோய்த் தொற்றுக்கு உள்ளாவோரைக் குறைப்பதிலும் தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று, கொரோனாவில் தோற்று விட்ட அ.தி.மு.க அரசுக்கு, மத்திய பா.ஜ.க. அரசின் பிரதமர் பாராட்டுரை வாசித்திருப்பது ஆச்சர்யமளிக்கவும் இல்லை; அதிர்ச்சியளிக்கவும் இல்லை; ஏதோ அவருக்கு அரசியல் ரீதியான கட்டாயம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல் - மூச்சுத் திணறி - “எப்போது கொரோனா குறையும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்” என்று கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு, முதலமைச்சரே கைவிரித்து விட்ட பிறகு - அவர் தலைமையிலான அரசு “சிறப்பாக நடவடிக்கை” எடுத்திருக்கிறது என்று பாராட்டும் நிலையும், நிர்ப்பந்தமும் பிரதமருக்கே ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பது விந்தையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

“வேளாண் மசோதாவை ஆதரித்த பழனிசாமி அரசை பிரதமர் மோடி பாராட்டியதில் ஆச்சரியமில்லை” : மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று துவங்கியதிலிருந்து, நோய்ப் பரவல் தீவிரமாகி, நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்னையிலிருந்து மாவட்டங்களுக்கும் பரவி - இன்றைக்கு அனைத்து மாவட்டங்களும் நோய்ப் பரவலின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் மட்டும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி; 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாநிலத்தின் தலைநகரத்தில் மட்டும் மாண்டுபோயிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 5.57 லட்சத்தைத் தாண்டி விட்டது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

மாநிலப் பேரிடர் ஆணையத் தலைவராக இருக்கும் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு - 284 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பேரிடர் துறை அமைச்சரின் மதுரை மாவட்டத்தில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு- 380 பேர் உயிரிழந்து விட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் மாவட்டத்தில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு- இதுவரை 126 பேர் உயிரிழந்து விட்டார்கள்.

ஒவ்வொரு மாவட்டமாக, “அரசியல் பிரச்சாரம்” மேற்கொண்டு, தேர்தல் வேலைகளை முந்திக்கொண்டு செய்ய, “ கொரோனா ஆய்வுக் கூட்டங்கள்” என்ற போர்வையில் முதலமைச்சர் சென்று வந்த பிறகும் - 10 ஆயிரம் முதல் 1.58 ஆயிரம் வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 17; 5 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் 10; ஆகவே இருக்கின்ற 37 மாவட்டங்களில், 27 மாவட்டங்கள் கொரோனா நோயின் கோரப் பிடியில்தான் இன்னமும் சிக்கிக் கொண்டு இருக்கின்றன.

“தமிழகத்தில் நோய்த் தொற்று கட்டுக்குள் இருக்கிறது. தினமும் நோய்த் தொற்று குறைக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் கூறிய அன்று, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,57,999; இறந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரம்! ஏன், 5 ஆயிரத்திற்கும் மேல் “தினசரி பாதிப்பு” என்ற நிலை, ஜூலை 22-ஆம் தேதி முதலில் ஏற்பட்டது; இந்த தினசரி பாதிப்பு 64 நாட்களாக 5 ஆயிரத்திற்கும் கீழே வரவில்லை. தொடர்ந்து நோய்த் தொற்று 5 ஆயிரத்திற்கும் மேல்தான் நீடிக்கிறது.

“வேளாண் மசோதாவை ஆதரித்த பழனிசாமி அரசை பிரதமர் மோடி பாராட்டியதில் ஆச்சரியமில்லை” : மு.க.ஸ்டாலின் சாடல்!

இவ்வளவு மோசமாக அனைத்து மாவட்டங்களும் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும்- பிரதமர் அப்படியொரு “பாராட்டுரை” வழங்குகிறார் என்றால்; அவருக்கே தமிழக அரசு, உண்மைகளைத் திரித்து, மாறான புள்ளிவிவரங்களைத்தான் கொடுத்திருக்கிறதா? அல்லது நாட்டின் “காவலாளி”யாக முன்னிற்கும் பிரதமர்; இப்போது கொரோனாவில் தோற்று, ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க அரசின் பாதுகாப்புக்கு, அரசியல் அடிப்படையில், பங்களித்திடும் நிலைக்கு வந்துவிட்டாரா என்ற நியாயமான கேள்வி தமிழக மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இயல்பாகவே எழுந்துள்ளது.

மத்தியில் பா.ஜ.க. அரசு எப்படி “புள்ளிவிவரங்கள் இல்லாத” அரசாக நடக்கிறதோ, அதே மாதிரித்தான் அ.தி.மு.க அரசும் “புள்ளிவிவரங்கள் இல்லாத” அல்லது “புள்ளிவிவரங்களை மறைக்கும் - குறைக்கும் அரசாக” நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மாவட்ட மருத்துவமனை வாரியாக- ஆய்வகங்கள் வாரியாக, கொரோனோ சோதனை விவரங்களைக் கொடுக்க இன்றுவரை அதிமுக அரசால் இயலவில்லை. இறப்பு எண்ணிக்கையில், “உண்மைக் கணக்கை” வெளியிடப் பயந்து - பொய்க் கணக்கு கொடுத்து- பிறகு அதை நேர் செய்யும் விதத்தில், இன்னொரு பொய்க் கணக்கைக் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது. ஏன், மத்திய அரசுக்கே கூட தவறான தகவலைக் கொடுக்கிறது என்பது மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பிய கேள்விக்கான பதிலில் இருந்து தெரிய வந்துள்ளது.

“கொரோனோ பரிசோதனைகள்” குறித்து, மாநிலங்களவையில் கழக உறுப்பினர் திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு 15.9.2020 அன்று, மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அளித்த பதிலில், “மார்ச் முதல் ஜூன் வரை 10,08,482 பேருக்குத் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளது. ஆனால் ஜூன் 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட மாநில அரசின் “தினசரி செய்தி குறிப்பில்” (Daily Bulletin) படி, 11,16,622 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. நான்கு மாதங்களில் மட்டும்- மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மாநிலங்களவையில் அளித்துள்ள பதிலுக்கும்- அதிமுக அரசின் தினசரி செய்திக் குறிப்பில் வெளியிடும் கணக்கிற்கும், ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேர் வேறுபாடு! ஜூலை- ஆகஸ்ட்- செப்டம்பர் மாத பரிசோதனைகளில், அ.தி.மு.க. அரசின் “பொய்க் கணக்கு” என்ன? இப்படியொரு வேறுபாடு எப்படி ஏற்பட்டது என்பதாவது பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டதா?

File image : MK Stalin
File image : MK Stalin

ஆகவே கொரோனாவில் அ.தி.மு.க அரசு சிறப்பாக நடவடிக்கை எடுக்கிறது என்ற “பாராட்டுப் பத்திரத்தை” வழங்கியிருக்கும் பிரதமர் நரேந்திரமோடி- தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உளவுத்துறை மூலம், ஒரு “ரகசிய விசாரணைக்கு” உத்தரவிட்டு- அ.தி.மு.க அரசின் கொரோனா படுதோல்விகளையும்- கொரோனா பாதுகாப்பு சாதனங்கள் கொள்முதல் ஊழல்களையும் விரிவாகத் தெரிந்து கொள்ளாலாம். தமிழக மக்கள் நலன் மீது பிரதமருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கும் என நம்புகிறேன்.

எனவே, “கூட்டணிக் கட்சி” என்ற குறுகலான எல்லையைக் கடந்து வந்து- அகன்று விரிந்திருக்கும் ஒரு நாட்டின் பிரதமராக; அ.தி.மு.க அரசின் கொரோனா தோல்வி- தமிழகத்தின் பொருளாதார மேலாண்மைப் பின்னடைவு - தொழில் வளர்ச்சித் தேக்கம் - வேலையின்மை - ஏழை எளிய நடுத்தர மக்களின் அதிருப்தி- கடும் நிதிப் பற்றாக்குறை மற்றும் நெருக்கடி- நிர்வாகச் சிதைவு - எனப் பலமுனைத் தோல்விகள் அனைத்தையும் அறிந்து கொள்வதுடன்; ஒவ்வொரு பிரிவு குடிமக்களும் எத்தகையை உபத்திரவங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் பெரும்பான்மையோர் எதிர்க்கும் “வேளாண் மசோதாக்களை” ஆதரித்த காரணத்திற்காகவும்; அன்றைய தினம் பிரதமருடனான காணொலி ஆலோசனையின் துவக்கத்திலேயே, “விவசாயிகளுக்கு ஆதரவான மூன்று வேளாண் மசோதாக்களைக் கொண்டு வந்த உங்களைப் பாராட்டுகிறேன்” என்ற முதலமைச்சர் பழனிசாமியின் “முகமனை” ஒட்டியும்; கொரோனா பேரிடரில் தவியாய்த் தவிக்கும் தமிழக மக்களின் உணர்வுகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம் என்று பிரதமர் அவர்களை மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories