இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளோடு சேர்ந்து போராடுவோம் என அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
LPF, AITUC, CITU, HMS, INTUC, AIUTUC, AICCTU, TUCC, MLF, LTUC ஆகிய தொழிற்சங்கங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வேளாண்மை தொடர்பான இரண்டு மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதை எதிர்த்து மத்திய அமைச்சர் ஒருவரே பதவி விலகி இருக்கிறார். மாநிலங்களவையில் சரி பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்கெடுப்புக்கு விட அரசு அனுமதிக்கவில்லை. குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறி விட்டதாக சொல்லி நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அரசு படுகொலை செய்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் வெளிநடப்பு செய்த பின்பு மூன்றாவதாக ஒரு மசோதாவையும் சட்டமாக்கி இருக்கிறது.
இந்தச் சட்டங்கள், வேளாண் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விட்டன. பன்னாட்டு நிறுவனங்களும், பிரமாண்டமான நில முதலாளிகளும் இந்திய விவசாய விளைபொருட்களையும், சந்தையையும் கட்டுப்படுத்துவதற்கான முழு அதிகாரத்தை இந்த சட்டங்கள் தந்துள்ளன. இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளை கொன்றொழிக்கின்றன. பதுக்கலையும் கள்ளச் சந்தையையும் இவை சட்டப்பூர்வமாக்கி விட்டன. வர்த்தக சூதாடிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதற்கான அரசு தலையீடுகளை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டன. தனது வேளாண் சமூகத்தை காப்பாற்றுவதற்கும் பாதுகாப்பதற்குமான மாநில அரசின் உரிமைகளையும் அதிகாரத்தையும் இந்த சட்டங்கள் ரத்து செய்து, மத்திய அரசின் கைகளில் குவிக்கின்றன. விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வதும், குறைந்த பட்ச ஆதார விலை தருவதும் கானல் நீராகிறது.
அந்நிய வணிகர்கள், பெரு நிலக்கிழார் கூட்டணி உத்தரவு இடுவதற்கு ஏற்றவகையில் ஒரு ஒப்பந்த வேளாண் முறைமை உருவாக்கப்படுகிறது. நாட்டில் உணவு பாதுகாப்பு பெரும் ஆபத்துக்குள்ளாகிறது. இதனால், வேளாண் உற்பத்திக்கு வெளியிலுள்ள நுகர்வோரான சாமானிய மக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அதானி, வால்மார்ட், அம்பானியின் ரிலையன்ஸ். வில்மர், பிர்லா, ஐடிசி போன்ற அந்நிய மற்றும் உள்நாட்டு பெரு வணிக நிறுவனங்களின் கொள்ளை லாபத்துக்கு இது வழி விடுகிறது.
இந்தியாவின் கிராமப்புற உழைக்கும் மக்களான விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலை தொழிற்சங்கங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். விவசாயிகள் தமது போராட்டங்களில் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துகிறோம்.
இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் பல்வேறு விவசாய, விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் செப்டம்பர் 25ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இந்த இயக்கம் தமிழ்நாட்டிலும் நடைபெறுகிறது. மேலும் இதே கோரிக்கைகளுக்காக தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் செப்டம்பர் 28ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன.
தமிழ்நாடு முழுமையிலும் செப்டம்பர் 25 மற்றும் 28ல் நடக்கும் விவசாயி, விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தில் நமது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது தொழிற்சங்கங்கள் அனைத்தும் முழுமையாக பங்கேற்கிறோம்.
நமது சங்கங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள், பேசி திட்டமிட்டு, அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் மேற்சொன்ன விவசாய- விவசாய தொழிலாளர் போராட்டங்களில் சங்க கொடிகள், பதாகைகளோடு சென்று பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.