"நண்பர்கள் இல்லாத ஒரு பகுதியில் வசிப்பது ஆபத்தானது" என்று காங்கிரஸ் கட்சியின்முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை அழித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாக விமர்சித்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டில், சீனா போன்ற அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவுகளில் விரிசல் விழும் நேரத்தில், நெருங்கிய கூட்டாளியான வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவுகள் பலவீனமடைவது குறித்த தி எகனாமிஸ்ட் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையின் ஸ்னாப்ஷாட்டை இணைத்து கருத்திட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாகச் சீனாவுடன் எல்லை மோதலில் ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கு ஆபத்தான வளர்ச்சியாகச் சீனாவுடனான வங்கதேசத்தின் உறவுகள் இப்போது எவ்வாறு வலுப்பெற்று வருகின்றன என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதையடுத்து ராகுல் காந்தி பா.ஜ.க அரசின் வெளியுறவுக் கொள்கைக்குப் பின்னால் இருக்கும் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து இந்தியாவின் கொரோனா வைரஸ் நிலவரம், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலையின்மை மற்றும் சீனாவுடனான மோதல் ஆகியவற்றைக் கையாள்வதில் மோடி அரசாங்கத்தைத் தாக்கிப் பேசியுள்ளார்.
"இந்த சர்வவல்லமையுள்ள(!) பா.ஜ.க அரசாங்கத்தின் முடிவற்ற ஆணவம் முழு நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.